வாக்களிக்காவிட்டால் மலாய் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை இழப்பார்கள்: ஹாடி

நாளை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் மலாய் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நினைவூட்டியுள்ளார். வாக்களிக்கத் தவறுவதும், ஒற்றுமையின்மையும் மலாய்-முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வரும் நிலையில், மலாய்க்காரர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்துவிடுவார்களோ என்று ஹாடி கவலை தெரிவித்தார்.

மலாய்க்காரர்கள் பிளவுபடும்போது அரசியல் அதிகாரம் பறிபோகும். அதனால்தான் ஒற்றுமை மிகவும் முக்கியமானது, என்று பாரிசான் நேஷனல் கட்சியின் சுங்கை உடாங் வேட்பாளர் ராயிஸ் யாசினின் தந்தையான யாசின் ஷரீப் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மாநிலத்தில் அம்னோ வலுவாக இருப்பதால் அது அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், தாங்கள் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் அதிகம் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாங்கள் விட்டுக்கொடுத்துச் செல்கிறோம். மலாக்கா அம்னோவின் கோட்டை என்பதால், அதிகத் தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சி அதிக ஆர்வம் காட்டவில்லை. மலாக்காவில் அம்னோ ஆட்சியைப் பிடிக்கும்போது, பாஸ் கட்சியும் அரசாங்கத்தில் இணையும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம், என்று அவர் தெரிவித்தார்.

ம.சீ.ச மற்றும் ம.இ.கா ஆகிய கட்சிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமூகங்கள் உட்பட, “தீவிரவாதப் போக்கற்ற” மலாய்க்காரர் அல்லாத சமூகங்களைத் தங்களுடன் இணைந்து பணியாற்ற அழைப்பதற்கு முன்பாக, மலாய்க்காரர்களின் நிலையை வலுப்படுத்துவதே பாஸ் கட்சியின் முன்னுரிமை என்று ஹாடி கூறினார்.

மேலும், பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் போட்டியிடும் ம.சீ.ச, ம.இ.கா மற்றும் கெராக்கான் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அவர் பாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

இனவாத அரசியல் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், முஸ்லிம் அல்லாத சமூகங்களை ஒடுக்குவதற்கு மலாய் தலைமையை ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியாது என்றும் ஹாடி கூறினார்.

மேலும், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களுக்குச் செல்லும் மலாய்க்காரர் அல்லாதவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயல்பவர்களுக்கும் அவர் சவால் விடுத்தார். அந்த இரு மாநிலங்களும் அமைதியாக இருப்பதாகவும், பாஸ் (PAS) நிர்வாகத்தின் கீழ் அங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் நியாயமாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

-fmt