சமீபத்தில் இரண்டாம் படிவம் மாணவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் பகடிவதைகளைக் கையாள்வதற்கு “ஒரே சீரான விதிமுறை” கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை வெவ்வேறு வழிகாட்ட நெறிமுறைகளைக் கொண்டுள்ளன என்று பி. கமலநாதன் கூறினார்.
24 மணி நேரத்திற்குள் பதில் நடவடிக்கை, ஏழு நாட்களுக்குள் விசாரணை, 14 நாட்களுக்குள் இறுதி நடவடிக்கை என்ற தெளிவான காலக்கெடுவுடன் கூடிய ‘ஒரே ஒரு தேசிய ராகிங் எதிர்ப்பு வழிகாட்டு நெறிமுறை’ நமக்குத் தேவை, என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2013 முதல் 2018 வரை இப்பதவியை வகித்த கமலநாதன், குழந்தைகளுக்கு எவ்வாறு தொடர்புகொள்வது என்பதைச் சொல்லிக்கொடுப்பதிலும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சகிப்புத்தன்மையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தமது ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது, பல குழந்தைகளுக்கு உணர்வுப்பூர்வமான பகுத்தறிவுத் திறன் குறைவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாம் அவர்களுக்கு ஸ்டெம் (STEM – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியைக் கற்பிக்கிறோம்; ஆனால் அதே வேளையில், மற்றவர்களுக்கு எவ்வாறு மதிக்கத்தக்க வகையில் தொடர்புகொள்வது, வன்முறையைக் காணும்போது வெறும் வேடிக்கை பார்க்காமல் எவ்வாறு தடுத்து நிறுத்துவது மற்றும் ஆபத்து காலத்தில் எவ்வாறு உதவியை நாடுவது ஆகியவற்றையும் நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், முழுநேரத் தங்கிப் படிக்கும் விடுதிப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வார்டன்களின் விகிதாச்சாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆலோசகர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும், ராகிங் புகார்களைத் தெரிவிக்கும் இணையப் பக்கத்தை முற்றிலும் அடையாளம் காட்டாத மற்றும் குழந்தைகளுக்கு உகந்த ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டில், விடுதியில் தங்கியிருக்கும் ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் மூன்று வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
“ராகிங் தொடங்குவதற்கு முன்பே ஆசிரியர்கள் பிரச்சினையைக் கண்டறியும் வகையில் ‘முன்கூட்டியே கண்டறியும் நெறிமுறைகள்’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பள்ளிகளில் இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதில் ஆசிரியர்களும் ஆலோசகர்களும் முதுகெலும்பாகத் திகழ வேண்டும், என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள ஒரு விளையாட்டுப் பள்ளியில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவருடைய இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன.
14 வயதான இத்லான் ஃபாரீக் ஷஹ்ரில், பள்ளியின் தங்கும் விடுதியில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, துவான்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இத்லானின் குடும்பத்தினர் அவர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஒரு மாணவரைக் கைது செய்துள்ள காவல்துறை இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் முதன்மைப் பராமப்பாளர்கள் என்ற வகையில் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும், தங்களது பிள்ளைகளின் நடத்தை முறைகளைக் கூர்ந்து கவனித்து, வீட்டிலிருந்தே ராகிங் பழக்கத்தை வேரோடு ஒழிக்க உதவ வேண்டும் என்றும் கமலநாதன் கேட்டுக்கொண்டார்.
பள்ளியும் அதன் பணியாளர்களும் உங்களுக்கு ஆதரவளிக்க மட்டுமே இருக்கிறார்கள், ஆனால் பெற்றோர்களும் தங்களின் பங்கைச் செய்ய வேண்டும், என்று அவர் கூறினார்.
-fmt
























