கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு திடீர் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பங்கள், தங்களின் காத்திருப்பு 33-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களுக்குப் பிரியமானவர்களைத் தேடும் பணி குறித்த தெளிவான விபரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
காணாமல் போன 33 வயது சுகுணா பாலனின் அத்தையான எஸ். புனிதா கூறுகையில், இந்தத் துயரமான சம்பவத்தால் தங்களுக்குப் பிரியமானவர்களின் நிலை என்ன என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையுடன் தவிப்பது மட்டுமல்லாமல், இதனால் ஏற்பட்ட நிதி மற்றும் உணர்வுப்பூர்வமான பாதிப்புகளையும் குடும்பங்கள் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
சுகுணா தனது குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக (வருமானம் ஈட்டுபவராக) திகழ்ந்தவர் என்றும், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவான தகவல் தற்போது தங்களுக்குத் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அங்கு என்ன நடந்தது மற்றும் நாங்கள் அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய உறுதியான தகவல் எங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். 33 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் காணாமல் போன 55 பேரைப் பற்றி எங்களுக்கு இன்னும் எந்தச் செய்தியும் இல்லை.
அவர்களின் சாமான்கள் அல்லது தனிப்பட்ட பொருட்கள் போன்ற உடைமைகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
காணாமல் போன மலேசியர்கள் குறித்த சமீபத்திய நிலவரங்களை அறிந்துகொள்வதற்காக, இங்குள்ள வெளியுறவு அமைச்சின் தலைமையகமான விஸ்மா புத்ராவிற்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்களில் புனிதாவும் ஒருவராவார்.
சுகுணாவின் பெற்றோர்களான – புனிதாவின் மூத்த சகோதரி மற்றும் மாமா தங்களது மகளை இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும், நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு உறவினரான 38 வயது எம். சுப்பிரமணியம் – இவர் காணாமல் போன 74 வயது வி. கிருஷ்ணனின் மருமகன் ஆவார். காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் அல்லது இதுவரை கண்டறியப்படாத ஏதேனும் ஒரு பகுதியில் இருக்கக்கூடும் என்று தங்களது குடும்பத்தினர் இன்னும் நம்புவதாகத் தெரிவித்தார்.
இன்றுடன் 33 நாட்கள் ஆகிவிட்டன. அனைத்துக் குடும்பங்களும் பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற செய்தியோ அல்லது ஏதேனும் ஒரு முகாமில் அவர்கள் தங்கியிருக்கலாம் என்ற செய்தியோ வரும் என்று நாங்கள் இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம், என்று அவர் கூறினார்.
நேபாளம்-சீனா எல்லைகளின் இருபுறமும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் பணியின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள சமீபத்திய விபரங்களைத் தங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே குடும்பத்தினர் எதிர்பார்க்கும் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கு முன்பாக, காணாமல் போன மலேசியர்கள் குழுவினர் திபெத் குடிவரவுச் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றார்களா என்பதை அறியவும் தங்களது குடும்பத்தினர் விரும்புவதாக சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தனது மாமனார் உட்பட மேலும் 26 பேர் கடைசியாக ஒரு கட்டிடத்திற்குள் இருந்ததாக அறியப்பட்டதாகவும், அந்த இருப்பிடம் குறித்த தகவல் விஸ்மா புத்ராவிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட இப்பேரிடரைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இடையே நடைபெற்ற இன்றைய மூடிய கதவு சந்திப்பு இரண்டாவது அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.
திபெத்தில் உள்ள லெந்தே கோலா மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவினால் தூண்டப்பட்ட ஆகஸ்ட் 26 வெள்ளம் மற்றும் குப்பைக் கூளங்களின் சீற்றம், 1,450-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், இன்னும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
-fmt
























