மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் அசாம் பாக்கி மீதான விசாரணை போதுமானதாக இல்லையென்றாலோ அல்லது எழுப்பப்பட்ட புகார்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் இல்லையென்றாலோ, அதனை விரிவுபடுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தலைமை வழக்கறிஞர் தலைமையிலான சிறப்புக் குழு நடத்தி வரும் இந்த விசாரணையின் ஆரம்பக்கட்ட முடிவுகள், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட புகார்களின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், விசாரணையை மேலும் நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அன்வார் கூறினார்.
இருப்பினும், அசாம் பக்கி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக எந்த முடிவிற்கும் வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். உண்மைகளை நிலைநாட்ட, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான நடைமுறையின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைப்பதற்கு இது மிக ஆரம்பகட்டமாகும் என்று அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் அறிக்கை இன்னும் “ஒன்று அல்லது இரண்டு நாட்களில்” தயாராகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணை முடிவுகள் வெளியான பிறகு, அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
அசாம் பாக்கி தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சனைகளில் புத்ராஜெயா ஏன் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று வான் அகமது ஃபாய்சல் வான் அகமது கமால் (சுயேச்சை-மச்சாங்) எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் அன்வார் பதிலளித்தார்.
ஆசாம் பாக்கி ஒரு நிறுவனத்தில் 1,770 லட்சம் (17.7 million) பங்குகளை வைத்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகாரின் அடிப்படையில், சிறப்புக் குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் அரசு ஊழியர்கள் வைத்திருக்கும் பங்குகள், அந்த நிறுவனத்தின் மூலதனத்தில் 5% அல்லது 1,00,000 ரிங்கிட் ஆகியவற்றில் எது குறைவோ, அந்த அளவைத் தாண்டக்கூடாது என்ற 2024 ஆம் ஆண்டு அரசாங்கச் சுற்றறிக்கையை ஆசாம் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், புளூம்பெர்க்கின் செய்தியை மறுத்துள்ள அசாம் பாக்கி, அந்த செய்தி நிறுவனத்தின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஈடாக 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளார்.
-fmt
























