AI மூலம் தொழிலாளர் நியமனமா? மனிதவள அமைச்சின் திட்டத்திற்குப் பல தரப்பிலிருந்து கேள்விகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர் நியமனத்திற்காக மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) முறை சார்ந்த புதிய திட்டத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், பொதுக் கொள்கை ஆய்வாளரும் கேள்வி எழுப்பியுள்ளனர். தொழிலாளர்கள் எந்தவிதமான கட்டணமுமின்றி பணிக்கு அமர்த்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்பட்டாலும், இதன் நம்பகத்தன்மை குறித்து அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ மற்றும் வி. ஐஸ்வர்யா ஆகியோர், இந்தப் புதிய முறை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டதா என்றும், இத்திட்டத்திற்காக அரசாங்கம் எவ்வளவு செலவிடப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள ‘வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு’ முறையிலிருந்து இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்குமாறும் அவர்கள் அமைச்சைக் கேட்டுக்கொண்டனர்.

தொழிலாளர்களிடமிருந்து கட்டணங்களைச் சுரண்டும் ஒரு கும்பலின் கருவியாக ‘வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு’ மாறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வெறும் செயற்கை நுண்ணறிவு என்ற பெயர் மட்டும் நிர்வாகத் தோல்விகளைத் தானாகவே சரிசெய்துவிடாது. இந்தப் புதிய தளம் அதே நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?” என்று அவர்கள் தங்களது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) முறையிலான இந்தத் திட்டம் இடைத்தரகர்களைத் தவிர்க்கும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்தச் செலவும் ஏற்படாது என்றும் மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறிய கருத்தையும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலேசியாவில் வேலை பெறுவதற்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் கிராமங்களில் உள்ள முறைசாரா தரகர்களுக்குக் கட்டணம் செலுத்துகிறார்கள்; இதனை இந்த AI அமைப்பு எவ்வாறு கண்காணிக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

‘மிக முக்கியமாக, இந்த செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை உருவாக்குபவர் யார், அதனை யார் கட்டுப்படுத்துவது?’

‘பெஸ்டினெட்டின் FWCMS அமைப்பு முறையான பகிரங்க டெண்டர் இன்றி வழங்கப்பட்டதுடன், ஆறு ஆண்டுகளாக ஒப்பந்தம் இல்லாமலேயே இயங்கியது. இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தளம் வெளிப்படையான பொது கொள்முதல் முறை மூலம் செயல்படுத்தப்படுமா அல்லது இதுவும் ஒரு நேரடி பேச்சுவார்த்தையாக இருக்குமா?’ என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பரவலாகவும், திட்டமிடப்பட்ட ஒன்றாகவும் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) விவரித்துள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அமைப்புகள் அதே முறையை மீண்டும் உருவாக்கிவிடக் கூடாது. கடந்த காலத் தவறுகளுக்குத் தண்டனையற்ற நிலை தொடரும் வரை, எந்தத் தொழில்நுட்பத்தாலும் நம்பிக்கையை வளர்க்க முடியாது,” என்று சார்லஸ் சாண்டியாகோ மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நேற்று வங்காளதேசத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இந்த அமைப்பு இடைத்தரகர்களைக் குறைக்கும் என்றும், புலம்பெயர்ந்தோருக்கானச் செலவைக் குறைக்கும் என்றும் ரமணன் கூறினார். அதே வேளையில், பணி நியமனத்திற்கான முழுச் செலவையும் முதலாளிகளே ஏற்பதை இது உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இதனால் தொழிலாளர்களுக்கு எந்தவிதமானச் செலவும் இருக்காது” என்று கூறிய அமைச்சர், இத்தகைய மின்மயமான தளத்தைச் செயல்படுத்துவதற்கு வங்காளதேசம் தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

 

-fmt