அரசு நிதி பெற்ற போதிலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தவறிய வழக்குகள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MACC-இன் பரிந்துரைகளில், முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அடங்கும்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு உதவித் தொகைகளை வழங்குதல், நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு ஆறு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை நெகிரி செம்பிலான் MACC, இன்று புத்ராஜெயாவில் அமைச்சகத்தின் வீடமைப்பு மற்றும் சமூக நலப் பிரிவின் துணைத் தலைமைச் செயலாளர் ஸுல்கெஃப்லீ சுலைமானிடம் வழங்கியது.
அந்தப் பரிந்துரைகளில் ஒன்று, ஒவ்வொரு முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலமும் சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் (Registrar of Societies) அல்லது சம்பந்தப்பட்ட மதச் சட்டங்களின்படி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
“திட்ட காலக்கெடு நீட்டிப்புகள் மிக விசேஷமான சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும், பயன்படுத்தப்படாத நிதியைத் திருப்பிச் செலுத்துவதற்கும், அல்லது விண்ணப்ப நிபந்தனைகளை மீறிய முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களிடமிருந்து நிதியை மீளப் பெறுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,” என்று MACC தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அமைச்சகத்திடமிருந்து நிதி உதவி பெற்றும் பராமரிப்பு திட்டங்களை மேற்கொள்ளத் தவறிய சில முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக MACC கூறியது.
மேலும், பழுதுபார்ப்பு பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் மேலும் விரிவாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்பக் குழுக்கள் நேரடி இட ஆய்வுகளின் போது பூர்த்தி செய்ய வேண்டிய ஆய்வு அறிக்கைப் படிவங்கள் புகைப்பட ஆதாரங்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்றும் MACC பரிந்துரைத்தது.
ஆறாவது பரிந்துரையாக, MACC சட்டம் 2009-ன் பிரிவு 18-ன் கீழ் ஒரு விதியைச் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ஆவணங்களும் தகவல்களும் உண்மையானவை என்றும், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்குகின்றன என்றும் விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
நெகிரி செம்பிலான் MACC இயக்குநர் அவாங்கொக் அகமது தௌஃபிக் புத்ரா அவாங் இஸ்மாயிலிடமிருந்து அறிக்கையைப் பெற்ற சுல்கெஃப்லீ , அமைச்சகம் இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.
























