இராகவன் கருப்பையா – வார இறுதியில் நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த மகத்தான வெற்றியானது, 16ஆவது பொதுத் தேர்தலை எந்நேரத்திலும் முடிக்கிவிடக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் தேசிய முன்னணியின் ‘மேகா’ திட்டம் என்று கூட நாம் சொல்லலாம். ஏனெனில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் இழந்த ஆட்சியை பழையபடி கைப்பற்றி யாருடைய தயவுமின்றி சுயமாகவே நாட்டை வழி நடத்துவதே அக்கூட்டணியின் எண்ணம்.
தேசிய முன்னணி தலைவரான துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் சுமார் 10 நாள்களுக்கு முன் இதனை அப்பட்டமாக அறிவித்தது நமக்கு சற்று வியப்புதான்.
ஏனென்றால் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதமர் அன்வாருக்குக் தோழமையாக இருந்து நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றும் அந்தக் கூட்டணி குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் பக்காத்தான் ஹராப்பானை விட்டு பிரியாது என குறைந்தது 2 தடவை அவர் மிகத் தெளிவாக அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த ஜொகூர் தேர்தலின் போது திடீரென உந்துதலைப் பெற்று, கொடுத்த வாக்குறுதியை புறந்தள்ளி, தனியாக நாட்டை வழி நடத்துவது பற்றி மிகுந்த நம்பிக்கையோடு அவர் பல்டியத்து பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி விலகினால் மடானி அரசாங்கம் உடனே கவிழாது. ஆனால் ஆட்சி வலுவிழந்து, சிறிதுநாள் கழித்து எதுவும் நடக்கலாம். திரைமறைவில் பேரம் பேசுவதில் நம் அரசியல்வாதிகள் பலே கில்லாடிகள்.
முன்னாள் பிரதமர் நஜிபின் ‘மேகா’ ஊழல்களினால் ஆட்சியை இழந்த அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியினர், மீண்டும் நாட்டை கைப்பற்றுவதற்கு என்னவெல்லம் செய்தார்கள் என்பது வரலாறு.
ஆட்சியில் இருந்தால் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க வழி பிறக்கும் எனும் குறுக்குச் சிந்தனை நம் நாட்டின் அரசியல்வாதிகள் நிறைய பேருக்கு உண்டு என்பது யாருக்குதான் தெரியாது!
தேவையே இல்லாத ஒரு பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் பொருட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அப்போதைய பிரதமர் சப்ரிக்கு எப்படியெல்லாம் நெருக்குதல் கொடுக்கப்பட்டது என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அகங்கார அரசியலுக்கும் நீதித்துறைக்கும் இடையில் நிகழ்ந்து அந்த கடுமையான போராட்டத்தில் கடைசியில் நீதி வெற்றி பெற்று நஜிப் சிறையிலடைக்கப்பட்ட சம்பவத்தை சர்வதேச ஊடகங்களும் கூட அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டின.
ஆக மீண்டும் அதே போன்றதொரு வரலாறு திரும்புமோ என்று இந்தருணத்தில் நமக்கு நினைக்கத் தோன்றுவதிலும் நியாயம் உள்ளது.
அமெரிக்க – ஈரான் போரினால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நமக்கும் அதன் தாக்கம் கூடிய விரைவில் ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடும்.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து நாமெல்லாம் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படிப்பட்ட சூழலில் தவணை காலம் முடியாத பட்சத்தில் சுயநல அரசியல்வாதிகள் தேர்தல்களை முடிக்கிவிட்டு குளிர்காயத் துடிக்கின்றனர்.
‘இவர்களா மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார்கள்,’ எனும் ஆதங்கம் நம் மனங்களை காயப்படுத்தி வலிக்கத்தான் செய்கிறது. ‘எல்லாமே அரசியல் சுயநலம்தானே,’ என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
ஜொகூர் மாநிலத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலும் அதன் பிறகு மலாக்கா மாநிலத் தேர்தலும் நடைபெறவுள்ளன.
இந்த மாநிலத் தேர்தல்களில் கிடைக்கும் வெற்றிகள் மத்திய அரசாங்கத்தை தேசிய முன்னணி கைப்பற்றுவதற்கு முக்கியமானத் தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அறிவித்த அஹ்மட் ஸாஹிட்டை என்னவென்று சொல்வது?
தற்போதைய அரசாங்கத்தின் 5 ஆண்டுகாலத் தவணை நிறைவடைய இன்னும் ஒரு வருஷத்திற்கும் மேல் கால அவகாசம் இருக்கும் போது ஏன் இந்த அவசரம்?
























