சாதனையாளர்களை போற்றுவோம் கயவர்களை அலட்சியம் செய்வோம்

இராகவன் கருப்பையா – நம்மில் சிலர் பல வேளைகளில் எம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை உணராமல் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு தொடர்ந்தாற் போல எரிச்சலூட்டி வருபவர்களைப் பற்றி அதிகமாக சிந்திப்பதால், உணர்ந்தோ உணராமலோ மகிழ்ச்சி தரக்கூடிய மற்றவர்களை மறந்துவிடுகிறோம்.

கடந்த சில வாரங்களாக ஸம்ரி வினோத் காளிமுத்து எனும் ஒரு நபரைப் பற்றியே நம்மில் பலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் ஒட்டு மொத்த சமூகம் மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை தேடித் தந்துள்ள சுவர் பந்து வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியத்தின் சாதனையைப் பற்றி அவ்வளவாக நாம் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் நமக்கு அவ்வப்போது மன உலைச்சலைக் கொடுக்கும் ஒரு நபரின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து நாடளாவிய நிலையில் நாமே அவரை புகழடையச் செய்கிறோம்.

இந்துவாக இருந்து மதம் மாறிய அந்நபர் நம் சமூகத்தை, குறிப்பாக இந்நாட்டின் இந்துக்களின் மனங்களை அதிக அளவில் புண்படுத்தியுள்ளார் என்பதை மறுக்கலாகாது.

அவருக்கு எதிராக ஏறத்தாழ 1000 புகார்கள் செய்யப்பட்ட போதிலும் நமது காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனும் நமது ஆதங்கமும் இப்போது ஒரு முடிக்கு வந்துள்ளது.

ஏனெனில் இரு தினங்களுக்கு முன் அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இது நமக்கு சற்று ஆறுதலான விஷயமாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க, இனிமேலும் அந்நபரைப் பற்றி பேசி நமது பொன்னான நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு அவர் ஒன்றும் முக்கியமானவரோ, பிரமுகரோ இல்லை.

சுவர் பந்து விளையாட்டின் உலக தர வரிசையில் 6ஆவது நிலையில் கோலோச்சும் சிவசங்கரி, சில தினங்களுக்கு முன் மிகப் பெரிய சாதனையொன்றை புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற, தங்கத் தரத்திலான போட்டிகளின் இறுதியாட்டத்தில் அமெரிக்கப் பெண்மணியை நேர் செட்டுகளில் வீழ்த்தி உலகச் சாதனை ஏற்படுதினார்.

இந்த அபார வெற்றி தொடர்பாக பிரதமர் அன்வார் கூட தனது முகநூலில் மகிழ்ச்சி தெரிவித்து சிவசங்கரியை பாராட்டியுள்ளார்.

இது நமக்கெல்லாம் பெருமையளிக்கக் கூடிய, மட்டற்ற மகிழ்ச்சி தரவல்ல ஒரு விஷயமல்லவா! இதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்வு செய்து உல்லாசம் கொண்டாடுவோமே!