மக்கள் பணத்தில் ஒளிபரப்பான    உலகக் கிண்ண கால்பந்து

இரா கவன் கருப்பையா- இவ்வாரம் தொடங்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் நேரடி ஒளிபரப்புகளைக் காண்பதற்கு தொலைக்காட்சி உள்பட தற்பொழுது பல்வேறு தளங்கள் நமக்கு உள்ளன.

ஆனால் சுமார் 44 ஆண்டுகளுக்கு முன் திரள்நிதியின்(Crowd Funding) வாயிலாகத்தான் இது சாத்தியமானது எனும் உண்மை நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Some of the students of MySkills Foundation bonding over a game of football.

இணைய வசதிகளோ எஸ்ட்ரோ(Astro)வோ இல்லாத அந்த காலக்கட்டத்தில் தொலைக்காட்சி 1(RTM 1) மட்டுமே அத்தகைய நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்ளும். அதுவும் கூட தொடக்க நாள் ஆட்டம், அரையிறுதி மற்றும் இறுதியாட்டம், ஆகியவற்றை மட்டுமே நாம் காண இயலும்.

எனினும் கடந்த 1982ஆம் ஆண்டில் ஸ்பெய்னில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பத்து போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நமது தொலைக்காட்சி நிலையத்திற்கு திடீரென பணச் சில்கல் ஏற்பட்டது.

ஏனெனில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான செலவுகளை வழக்கமாக ஏற்றுக் கொள்ளும் ‘சிகரெட்’ நிறுவனங்கள் அவ்வாறு செய்ய இயலாமல் போய்விட்டது.

கடந்த 1980ஆம் ஆண்டுகளுக்கு முன் ‘சிகரெட்’ நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திகளை தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய அனுமதி இருந்தது எனும் விவரம் தற்போதைய இளம் தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் 80ஆம் ஆண்டுகள் தொடங்கி, நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் முன்னெடுப்புகளில் ஒன்றாக அத்தகைய விளம்பரங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இதனால்தான் மலேசியத் தொலைக்காட்சி நிலையத்திற்கு அந்த சிக்கல் ஏற்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் பிரேசிலின் ஸிக்கோ மற்றும் சொக்ரட்டிஸ், இத்தாலியின் ரோசி, அர்ஜென்டினாவின் மராடோனா, ஃபிரான்ஸ் நாட்டின் பிளாட்டினி மற்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ருமனிகா போன்றோர் அனைத்துலக கால்பந்து நட்சத்திரங்களாக விளங்கினார்கள்.

இதனால் பெருத்த ஏமாற்றமடைந்த மலேசிய கால்பந்து ரசிகர்கள் கதிகலங்கிய நிலையில் செய்வதறியாது பரிதவித்துக் கொண்டிருந்த போது காப்புறுதி முகவர் ஒருவருக்கு சீசிய யோசனை ஒன்றுத் தோன்றியது.

‘மலாய் மெய்ல்'(Malay Mail) பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அவர், திரள்நிதியின் வழி பொது மக்களிடமிருந்து பணம் திரட்டி அந்த நேரடி ஒளிபரப்புகளை சாத்தியப்படுத்துவோம் என அதிரடியாக பரிந்துரை செய்தார்.

இந்த யோசனை அப்போதைய தகவலமைச்சர் அடிப் அடாமிற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரும் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

செய்தி கேட்டு குதூகலமடைந்த அந்த காப்புறுதி முகவர் தலைநகர் பங்சாரில் அமைந்துள்ள மலாய் மெய்ல் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று 10 ரிங்கிட் கொடுத்து அந்த நிதியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தர்.

இந்தச் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியதைத் தொடர்ந்து பொது மக்கள், குறிப்பாக கால்பந்தாட்ட ரசிகர்கள், நாடு தழுவிய நிலையில் உள்ள ‘மலாய் மெய்ல்’ அலுவலகங்களை நோக்கி சாரை சாரையாக படையெடுத்து தங்களால் இயன்றத் தொகையை வாரி வாரி வழங்கினார்கள்.

அந்த காலக்கட்டத்தில் ATM எனும் பொருளக பண பட்டுவாடா இயந்திரமோ இயங்கலை(Online) வழியான பண  பரிமாற்றம் செய்யும் வசதிகளோ இல்லாததால் பொது மக்கள் நேரடியாக அங்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு சிலர் தங்களுடைய உண்டியல்களைக் கூட அங்கு கொண்டுச் சென்று அவற்றில் இருந்த அவ்வளவு சில்லறை காசுகளையும் வழங்கினார்கள். பல பேர் காசோலைகள்(Cheques) மற்றும் தபால் ஆணைகளின்(Postal Order) வழி நிதி வழங்கினார்கள்.

நன்கொடை வழங்கிய அத்தனைப் பேருடைய பெயர்களையும் ‘மலாய் மெய்ல்’ அன்றாடம் பிரசுரம் செய்ததால் நிறைய பேருக்கு அது உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

அப்போதைய பேரரசர் 1,000 ரிங்கிட் வழங்கிய வேளையில் பிரதமராக இருந்த மகாதிர் 200 ரிங்கிட்டும் துணைப் பிரதமராக இருந்த மூசா ஹீத்தாம் 150 ரிங்கிட்டும் வழங்கியதாகக் கூறப்பட்டது.

சில வாரங்களிலேயே 300,000 ரிங்கிட்டைத் தாண்டிய அந்த நிதியைக் கொண்டு ஆர்.டி.எம்.1 அந்த ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளை நமது இல்லங்களுக்குள் கொண்டு வந்தது மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.