-இராகவன் கருப்பையா
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு மலேசிய அரசாங்கம் இன்னமும் இழப்பீடு வழங்கவில்லை என்பது நமக்கு அதிர்ச்சித் தகவல்.
இவ்விவகாரத்தில் நம் அரசாங்கம் ஏன் இத்தகைய அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் இப்போது பலருடையக் கேள்வியாக உள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த 48 வயது விஜயலட்சுமி, திடீரென உள்வாங்கிய நடைபாதையில் தவறி விழுந்தது நாம் எல்லாரும் அறிந்ததே.
ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடும் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வியில்தான் முடிந்தது என்பதும் நமக்குத் தெரியும்.
அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த அந்த பரிதாப சம்பவத்தில் ஆழ்குழியில் விழுந்து மாயமான விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு மலேசிய அரசாங்கம் முதல்கட்ட உதவித் தொகையாக 30ஆயிரம் நீங்கிட்டை வழங்கியது.
ஆனால் அதன் பிறகு எவ்வித இழப்பீட்டுத் தொகையும் அக்குடும்பத்திற்கு வழங்கப்படாமல் உதாசினப்படுத்தப்பட்டிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
“இந்த 30 ஆயிரம் ரிங்கிட் நல்லெண்ண அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதேத் தவிர இது இழப்பீட்டுத் தொகையில்லை,” என அப்போதைய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலேஹா விளக்கமளித்தார்.
விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு முறையான இழப்பீடு வழங்குவது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஆனால் அதன் பிறகு அக்குடும்பத்தினருக்கு ஒரு சல்லிக் காசும் வழங்கப்படவில்லை என்பது மிகவும் விருத்தமான ஒரு விஷயமாகும்.
இவ்விவகாரத்தை அவர் அமைச்சரவைக்குக் கொண்டுச் சென்றாரா இல்லையா என்று தெரியவில்லை.
அமைச்சரவைக்குக் கொண்டுச் சென்றிருந்தால் என்ன முடிவெடுக்கப்பட்டது, அப்படி இல்லையென்றால் ஏன் கொண்டுச் செல்லவில்லை, போன்ற வினாக்களுக்கு விடையளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
“மலேசிய அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை,” எனும் ஆதங்கத்தோடு விஜயலட்சுமியின் மகன் சூரியா கோலாலம்பூர் வந்துள்ளது நமக்கு அவமானம்தான்.
“குறைந்தபட்சம் ‘இறப்புப் பத்திரத்தை’யாவது முதலில் தயார் செய்து கொடுங்கள்,” என அவர் விடுத்துள்ள கோரிக்கை சற்று பரிதாபமாகத்தான் உள்ளது.
நம் அரசாங்கம் அளித்த வாக்குறுதி உரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை, வழக்கறிஞர்களின் உதவியை நாடியிருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.
ஆக நமது கவனக்குறைவினால் ஏற்பட்ட ஒரு அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டு சொல்லொன்னாத் துயருக்கு ஆளான ஒரு குடும்பத்திற்கு பல விதத்திலும் நாம் தொடர்ந்து பரிவு காட்ட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
மாறாக நமது ஏனோ தானோ போக்கினால் அவர்களை வீணே அலைக்கழித்து, அல்லோலப்படுத்தி, அவமானப்படுத்தக் கூடாது.
இவ்விவகாரத்திற்கு உடனே தீர்வுகாண்பதற்கான கடப்பாட்டை தற்போதைய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ கொண்டுள்ளார்.























