இராகவன் கருப்பையா–ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை
தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் போது மறக்காமல் தனது சட்டைப் பையில் சிறிய மிட்டாய் பொட்டலம் ஒன்றை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்ட ஆசிரியரைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கமாட்டோம்.
ஆனால் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்,’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப அந்த மிட்டாய்களைக் கொண்டுதான் குறும்புத்தனமான மாணவர்களை நல்வழிப்படுத்தியுள்ளார் அண்மையில் பணி ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியர் தேவராஜன்.
பள்ளியின் இணைப்பாட நடவடிக்கைகள் மட்டுமின்றி மாணவர் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாசிரியராக இருந்த அவர் எப்படிபட்ட மாணவரையும் அன்பால் வசப்படுத்துவதில் கெட்டிக்காரர்.
“சம்பந்தப்பட்ட மாணவரை தனியே அழைத்துச் சென்று, ஒரு நண்பரைப் போல முதலில் அவருடைய பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கேற்றவாறு ஆலோசனைகளை வழங்குவேன்.”
“அவர் சற்று சாந்தமானப் பிறகு அவரிடம் மிட்டாய் கொடுத்து அன்பாகப் பேசி என்னுடன் மேலும் அணுக்கமாக்கிக் கொள்வேன்,” என்கிறார் இந்த மலாய் மொழி ஆசிரியர்.
மலாக்கா, ஜாசினில் உள்ள புக்கிட் செர்மின் தோட்டத்தில் பிறந்த இவர் இளவயது முதல் பெற்றோருக்கு உதவியாக பல வேலைகளை செய்துள்ளார்.
யேசுதாஸ், ரூத் தம்பதியரின் 5 பிள்ளைகளில் மூத்த மகனான தேவராஜன் தனது ஆரம்பக் கல்வியை ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை டத்தோ பெண்டாஹாரா பள்ளியிலும் பயின்றார்.
“குடும்பச் சுமையை சமாளிப்பதற்கு என் தந்தை பகுதி நேரமாக ‘சம்சு’ எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சுவார். எனக்கு சுமார் 7 வயது இருக்கும் போதே பள்ளி முடிந்ததும் அப்பாவுக்கு உதவியாக நானும் தோட்டத்தின் ஒதுக்குப் புறமான அந்த இடத்திற்குச் செல்வேன்.”
“காய்ச்சிய சாராயத்தை என்னிடம் கொஞ்சம் கொடுத்து காட்டம் எப்படி இருக்கிறது என குடித்துப் பார்க்கச் சொல்வார் அப்பா. ஏறத்தாழ 13 வயது வரையில் இப்படிதான் அப்பாவுக்கு நான் உதவியாக இருந்தேன்.”
“இளவயதில் இப்படிப்பட்ட சிரமமான குழலை அனுபவித்ததனால்தான் பிற்காலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கிய பலதரப்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
“இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த பிறகு ராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த நான், புத்ரா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தேன்,” என தேவராஜன் மேலும் குறிப்பிட்டார்.
அதோடு நின்றுவிடாமல் யுனிசெல் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பையும் நிறைவு செய்த அவர் தமிழ் இலக்கியத் துறையிலும் வல்லமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் ஆயிரக்கணக்கான கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகளை புனைந்துள்ள தேவராஜன் நாட்டின் தலைச்சிறந்த மேடை நிகழ்ச்சி நெறியாளர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
ஏறத்தாழ 150கும் மேற்பட்ட வெவ்வேறு குரல்களில் பேசுவதிலும் பாடுவதிலும் தனித்தன்மை வாய்ந்த ஆற்றலைக் கொண்ட ஒரு பன்முகத் திறமையாளரான அவர் எண்ணற்ற நூல்களையும் வெளியீடு செய்துள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக இருந்த தேவராஜன் சென்ற ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
இருந்த போதிலும் கடைசியாக அவர் கற்பித்த ஜொகூர், தங்காக்கில் உள்ள லேடாங் இடைநிலைப் பள்ளிக்குச் சென்று, உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு தன்னார்வ முறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார்.
எவ்விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இத்தகைய வகுப்புகளை அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவராஜனின் மனைவி தமிழ்செல்வியும் பணி ஓய்வுபெற்ற ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியைதான். அவர்களுடைய இரு பெண் பிள்ளைகளான ஒவியா மற்றும் இலக்கியா, ஆகிய இருவரும் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர்.























