இராகவன் கருப்பையா
தந்தையர் தின சிறப்புக் கட்டுரை
தமது கல்விப் பயணம் சிறு வயதிலேயே தடைபட்டப் போதிலும் பிள்ளைகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் எனும் வேட்கையில் பல்வேறு தடைகளைத் தாண்டி அவர்களை வாழ்க்கையில் உயர்த்தி வெற்றி கண்டார் ஒரு சாதனைத் தந்தை, அவர்தான் ரவிச்சந்திரன்.
மலாக்கா மாநிலத்தில் உள்ள பெம்பான் மாவட்டத்தில் புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ் பள்ளியில் தமது னாஅரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், குடும்பச் சூழல் காரணமாக இடைநிலைப் பள்ளியில் கால் பதிக்க இயலாமல் போனது.
“ஒவ்வொரு நாள் காலையிலும் வீட்டிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அப்பள்ளிக்கு சக நண்பர்களுடன் நடந்தே சென்றது சுகமான ஒரு காலக்கட்டம்தான். தூரம் ஒரு பொருட்டாகவே இல்லை அப்போது.”
“சுமார் 10 வயது இருக்கும் போது பல வேளைகளில் ரப்பர் தோட்டத்தில் காய்ந்த பால் ஒட்டிக் கொண்டிருக்கும் மங்கை சுத்தம் செய்த பணிகள் கூட அலாதியான ஒரு அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.”
“இருந்த போதிலும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலைப் பள்ளிக்கு செல்ல இயலாத அந்தச் சூழல் அப்போதே எனது மனதை மிகவும் பாதித்துவிட்டது. ஏனென்றால் நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தத் தருணங்கள் அவை.”
பிறகு தமது 13ஆவது வயதிலிருந்து ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு ஜாசின் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் உணவகம் ஒன்றில் எடுபிடி வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான ரவிச்சந்திரன், 17 வயதை எட்டியவுடன் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணி செய்யத் தொடங்கினார்.
இள வயதிலிலேயே தமது கல்வி தடைபட்ட போதிலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அது ஒரு தடங்களாக இருக்கக் கூடாது எனும் வேட்டைகையில் ஏதாவது ஆக்ககரமாக செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர் தலைநகர் வந்தார்.
கோலாலம்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வாகனமோட்டும் பணியில் அமர்ந்த ரவிச்சந்திரன், சுமார் 10 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு 1 டன் எடையுடைய சுமையுந்து ஒன்றை கொள்முதல் செய்து சுய தொழில் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
இதற்கிடையே தமது 34ஆவது வயதில் மணிமேகலை எனும் உறவுக்காரப் பெண்ணை கரம்பிடித்த அவருக்கு விமான நிலையத்திற்கு சரக்கு அனுப்பும் குத்தகை பெரிய அளவில் கை கொடுத்தது.
“சிகசாந்தினி, ஹேமாவதி, ஸ்ரீ மஞ்சு மற்றும் ரவிஷா என அடுத்தடுத்து 4 பெண் குழந்தைகள் பிறந்த போது மட்டற்ற மகிழ்ச்சியடைந்த நாங்கள், அந்நால்வருக்கும் சிறப்பான கல்வியை வழங்குவதில் முழு கவனத்தையும் செலுத்தினோம்,” என்கிறார் ரவிச்சந்திரன்.
மூத்த மகள் சிகசாந்தினி தலைநகரில் உள்ள ஒரு காப்புறுதி நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் வேளையில் 2ஆவது மகள் சிலாங்கூர் செமிஞ்யில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
மூன்றாவது மகள் தனியார் நிறுவனமொன்றின் மனிதவளத் துறையில் உயர் பதவியில் உள்ளார். கடைசி மகள் யு.கே.எம்.(UKM) பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியல்(Radiography) துறையில் கல்வி பயின்று வருகிறார்.இவர்களில் இருவருக்கு திருமணம் முடித்து வைத்ததும் தமது வாழ்வின் மகிழ்ச்சியானத் தருணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஏறக்குறைய 28 ஆண்டுகளாக சுயத் தொழிலில் கடுமையான உழைப்பைப் போட்டதால் எனது 4 பிள்ளைகளுக்கும் சிறப்பானக் கல்வியை என்னால் வழங்க முடிந்தது,” என ரவிச்சந்திரன் பெருமிதமாகக் கூறுகிறார்.
“கடந்த 2020ஆம் ஆண்டில் உலகை புரட்டிப் போட்ட கோறனி நச்சிலின் பெரும் தாக்கமும் ‘லாலாமூவ்’ போன்றத் தளங்களும் என் தொழிலையும் அதிகம் பாதித்தன.”
“இருந்த போதிலும் போதுமான சேமிப்பு இருந்ததால், உபகாரச் சம்பளங்களின் உதவியோடு அவர்களுடைய உயர் கல்வி எவ்வகையிலும் தடைபடாதப்படி நான் பார்த்துக் கொண்டேன்.”
சிறப்பானதொரு குடும்பத் தலைவனாக 4 மகள்களின் உயர் கல்விக்கும் வித்திட்ட உள்ளக் களிப்பில் இந்த சாதனைத் தந்தை தற்போது பணி ஓய்வை அனுபவித்து வருகிறார்.























