பி.கே.ஆர். கட்சிக் கூட்டங்களில் இந்தியர்களின் அடாவடித்தனம்

இராகவன் கருப்பையா – சமீப காலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சிக் கூட்டங்கள் ஒரு சில இடங்களில் வன்முறையில் முடிந்தது நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

‘இந்தியர்கள் போகுமிடங்கள் எல்லாம் சண்டைதானா,’ என பிற இனத்தவர் கேலி பேசும் அளவுக்கு, நம் சமூகத்தினர் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இந்த அவல நிலை ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது.

பிரதமர் அன்வார் தலைவராக உள்ள பி.கே.ஆர்., மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட ஒரு கட்சி என்று எல்லாருக்கும் தெரியும்.

சீன சமூகத்தினருக்கு அடுத்து இந்தியர்களின் அங்கத்துவம் சிறிய அளவுதான். கூடுதலாக இருந்தாலும் கூட எல்லாமே ஏறத்தாழ ‘கோட்டா’ அடிப்படையில்தான் அமையும் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றுதான்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நம் சமூகத்தினரிடையே ஒருவருக்கொருவர் ஏன் இத்தகைய போராட்டம், அடிதடி, என நமக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் உள்ளது.

கிளை அல்லது தொகுதித் தேர்தல்களின் போது மலாய்க்காரர்களோ சீனர்களோ ஒருவரை ஒருவர் மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொண்டதாக செய்திகள் வருவது மிகவும் அபூர்வம்.

ஆனால் நம் சமூகத்தினர் நடந்து கொள்ளும் விதம்தான் நமக்கு தலை குனிவையும் அவமானத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

சில தினங்களுக்கு முன் சிலாங்கூர், கோலசிலாங்கூர் வட்டாரத்தில் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சிக் கூட்டத்தில் நம்மவர்கள் அங்கிருந்த நாற்காலிகளைக் கொண்டு முரட்டுத்தனமாகத் தாக்கிக் கொண்ட செய்திகளையும் படங்களையும் பல்லின ஊடகங்களும் அப்பட்டமாக வெளியிட்டன.

அச்சம்பவத்தில் 3 பேர் காயங்களுக்கு ஆளானதாகவும் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சண்டை இதர பி.கே.ஆர். உறுப்பினர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் கேவலப்படுத்துவதைப் போல் உள்ளது என்றால் அது மிகையில்லை.

முன்னதாக கடந்த மாதம் 20ஆம் தேதியன்று சிலாங்கூர், பூச்சோங்கில் நடைபெற்ற பி.கே.ஆர். கூட்டத்திலும் இதே போன்றதொரு அவல நிலைதான். நம் சமூகத்தினர்தான் அதற்கும் காரணம்.

சண்டை சச்சரவு முற்றிப்போய் நிலைமை ரவுடித்தனமாக மாறியது என ஊடகங்கள் செய்திகள்  வெளியிட்டன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது கடந்த 1970களின் பிற்பகுதியில் ம.இ.கா. கூட்டங்களில் நிகழ்ந்த அடாவடித்தனமும் குழப்பங்களும்தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

அக்கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலுவும் அதன் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையாவும் எதிரும் புதிருமாக இருந்த அக்காலக்கட்டத்தில் நாடலாவிய நிலையில் எண்ணற்ற கிளைக் கூட்டங்களில் இப்படிதான் நாற்காலிகள் பறந்தன.

அந்த சமயத்திலும் கூட பிற இனத்தவர் நம்மைப் பார்த்து ஏளனமாக கைக்கொட்டிச் சிரிக்க, நம் சமூகம் தலைகுனிந்து நின்றது.

ம.இ.கா. நிலைமை அதன் பிறகு சீரடைந்துள்ள நிலையில் ‘இந்நோய்’ தற்பொழுது பி.கே.ஆர். கட்சியில் உள்ள இந்தியர்களைப் பீடித்துள்ளதாகத் தெரிகிறது.

நமக்கென அரசியல் பலம் இல்லாத இந்நாட்டில் எதற்குதான் இந்த வீண் விதண்டாவாதமும், வன்முறையும், அவல நிலையும், எனும் கேள்வி எழுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.