தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அரசியல் நடவடிக்கைகளுக்காக, அரசியல்வாதிகள், தனிநபர்கள் மற்றும் சில அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி அனுப்பப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
பிகேஆர் இளைஞர் பிரிவின் தலைவர் காமில் முனிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதிகள் அரசியல் இயக்கங்களுடன் தொடர்புடையவை என்றும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் தெருப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான நிதியுதவிகள் இதில் அடங்கும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 2024 மற்றும் ஜூன் 2025-க்கு இடையில் பல பரிவர்த்தனைகள் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளை, ஓர் அரசு சாரா நிறுவனத்துடன் தொடர்புடைய உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு RM1.5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியதாகக் கூறப்படும் அறிக்கைகளை காமில் சுட்டிக்காட்டினார்.
2024 மற்றும் 2025-க்கு இடையில் அந்த அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கும், அதனுடன் தொடர்புடைய பல நபர்களுக்கும் RM680,000-க்கும் அதிகமான தொகையை ஏழு பரிவர்த்தனைகள் மூலம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியா தற்போது பெருகிய முறையில் சவாலான உலகளாவிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதைக் குறிப்பிட்ட காமில், வெளிநாட்டு நிதியுதவி மற்றும் திட்டமிடப்பட்ட அரசியல் கையாளுதல்கள் மூலம் நாட்டை சீர்குலைக்க முயலும் எந்தவொரு முயற்சியும், தேசத்தின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது மிகவும் ஆபத்தான ஒரு விவகாரமாகும். உள்ளூர் முகவர்கள் மூலமாக நாட்டின் அரசியல் சூழலை மாற்றியமைக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் சோதனைக்கூடமாக மலேசியா ஒருபோதும் மாறிவிடக்கூடாது,” என்று அவர் கூறினார்.
“இத்தகைய தலையீடுகள் நாட்டின் இறையாண்மையைச் சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளன. இது இறுதியில் பொருளாதாரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் அமைதி ஆகியவற்றில் நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வெளிப்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர் குறித்தும் உடனடியாக விரிவான விசாரணை நடத்துமாறு காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு முகமைகளுக்கு காமில் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராகிமை வீழ்த்துவதற்காக தாங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறவில்லை என்றும், பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி ரம்லியின் முகவராகத் தாங்கள் செயல்படவில்லை என்றும் ‘மந்திரி’ என்ற இளைஞர் குழு வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது.
-fmt
























