KWAP-ன் eFishery முதலீட்டு பந்தயம் எப்படி சீர்குலைந்தது?

மலேசியாவில், நவீன மீன்வள (Aquaculture) மேலாண்மை துறையில் செயல்பட்ட ஒரு பிராந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான eFishery-யில் Retirement Fund (Incorporated) (KWAP) செய்த முதலீட்டைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தோனேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் தனது நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையைப் பற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றத்தில் தற்போது ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இதன் பின்னர், மலேசிய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் KWAP எவ்வாறு குறைந்தபட்சம் ரிம 163.4 மில்லியன் தொகையை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது என்பது தீவிரமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் KWAP-இல் யாராவது ஒருவர் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல தரப்பினரும் இதை வெறும் “தவறான முதலீட்டு முடிவு” என்று அல்லாமல், மேற்பார்வைத் தவறு (Oversight Failure) எனக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மலேசியகினிவெளியிட்ட விரிவான அறிக்கையில், eFishery என்ன செய்தது, KWAP எவ்வாறு அதில் முதலீடு செய்தது, மேலும் இந்த விவகாரம் மலேசிய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

eFishery என்றால் என்ன?

eFishery நிறுவனர்கள் ஜிப்ரான் ஹுசைஃபா (இடது) மற்றும் கிறிஸ்னா ஆதித்யா

eFishery நிறுவனத்தை கிப்ரான் ஹுசைஃபா (Gibran Huzaifah) உருவாக்கினார். அவர் கிழக்கு ஜகார்த்தாவின் ஏழ்மை நிலவிய பகுதியில் கட்டுமானத் தொழிலாளியான தந்தைக்கும் இல்லத்தரசியான தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.

Institut Teknologi Bandung-இல் உயிரியல் (Biology) படித்துக் கொண்டிருந்தபோது, மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர்ந்த அவர் கூடுதல் வருமானத்திற்காக கெளுத்தி மீன் (Catfish) வளர்க்கத் தொடங்கினார். அவர் பட்டம் பெறும் நேரத்தில் அவரது சிறிய முயற்சி 70-க்கும் மேற்பட்ட குளங்கள் கொண்ட வணிகமாக வளர்ந்திருந்தது.

அவரது அனுபவம் மூலம் மீன் வளர்ப்பாளர்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகளை அவர் உணர்ந்தார். குறிப்பாக:

உற்பத்திச் செலவில் 70–80% வரை மீன் தீவனம் (Feed) செலவாகியது.

பெரும்பாலான விவசாயிகள் இன்னும் கையால் தீவனம் வழங்கினர்.

மீன்கள் உண்மையில் எவ்வளவு தீவனம் உண்ணுகின்றன என்பதை கண்காணிக்க எந்த நம்பகமான முறையும் இல்லை.

இதற்கு தீர்வாக, 2013 ஆம் ஆண்டு கிப்ரான் தனது நண்பர்களான பொறியாளர்களுடன், பின்னர் நிறுவனத்தின் Chief Product Officer ஆன கிரிஸ்னா ஆதித்யா (Chrisna Aditya) உள்ளிட்ட குழுவினருடன் சேர்ந்து, தானியங்கி தீவன வழங்கும் (Automated Feeding System) கருவியை உருவாக்கி eFishery நிறுவனத்தைத் தொடங்கினார்.

பின்னர், இந்த நிறுவனம் ஒரு முழுமையான Aquaculture Platform ஆக வளர்ந்தது. இது தானியங்கி தீவன அமைப்பை மட்டுமல்லாமல்:

விவசாயிகளை நேரடியாக வாங்குபவர்களுடன் இணைக்கும் சந்தை (Marketplace),

இடைத்தரகர்களை குறைக்கும் வணிக முறை,

eFarm மற்றும் eFisheryKu செயலிகள் மூலம் குளங்களை கண்காணிக்கும் வசதி,

eFund என்ற நிதி சேவையின் மூலம், வங்கிகள் கடன் வழங்காத விவசாயிகளுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கிடைக்கச் செய்வது

போன்ற பல சேவைகளையும் வழங்கியது.

செயற்கை நுண்ணறிவு (AI)

ஏப்ரல் 2024-இல், Microsoft நிறுவனம் eFishery உருவாக்கிய Mas Ahya என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரைப் பற்றி சிறப்பு கட்டுரை வெளியிட்டது.

இந்த AI, Microsoft-ன் Azure OpenAI Service-ஐ பயன்படுத்தி:

குளங்களின் நிலை, சந்தை விலை, உள்ளூர் மொழி மற்றும் வட்டார வழக்கில்,  விவசாயிகளின் கேள்விகளுக்கு எளிய மொழியில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் மூலம் eFishery, வெறும் கருவி தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், AI மற்றும் தரவு (Data) தொழில்நுட்ப நிறுவனம் என்றும் முதலீட்டாளர்களிடம் தன்னை முன்னிறுத்தியது.

நிறுவனம் சரிந்த நேரத்தில், இந்தோனேசியாவின் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 100,000-க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்பாளர்களுக்கு சேவை வழங்கியதாக தெரிவித்தது. மேலும், வங்காளதேசம், தாய்லாந்து, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் முன்னோடி (Pilot) திட்டங்களை மேற்கொண்டிருந்தது.

eFishery-க்கு யார் முதலீடு செய்தனர்? எவ்வளவு முதலீடு செய்தனர்?

2015 முதல் 2024 வரை, eFishery பல்வேறு முதலீட்டு சுற்றுகள் (Funding Rounds) மூலம் மொத்தமாக US$315 மில்லியன் (சுமார் ரிம 1.2 பில்லியன்) திரட்டியது.

முதல் முதலீடாக, செப்டம்பர் 2015-இல் நெதர்லாந்தைச் சேர்ந்த நிலையான மீன்வள முதலீட்டு நிறுவனம் Aqua-Spark, US$500,000 முதலீடு செய்தது.

முக்கிய முதலீட்டு சுற்றுகள்

Series A (நவம்பர் 2018): US$4.7 மில்லியன்

முன்னணி முதலீட்டாளர்: சிங்கப்பூரைச் சேர்ந்த Wavemaker Partners

இந்த முதலீட்டிற்காக 2022-ல் VC Deal of the Year விருதைப் பெற்றது.

Series B (ஆகஸ்ட் 2020): US$14 மில்லியன்

புதிய முதலீட்டாளர்கள்: Northstar Group (சிங்கப்பூர்)

GO-Ventures Endeavor (அமெரிக்கா)

Aqua-Spark மற்றும் Wavemaker மீண்டும் முதலீடு செய்தன.

Series C (ஜனவரி 2022):

US$90 மில்லியன் Aquaculture Tech Startup வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டு சுற்று எனக் கூறப்பட்டது.

இணைந்து முதலீடு செய்தவர்கள்:

Temasek (சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனம்)

SoftBank Vision Fund 2 (ஜப்பான்)

Sequoia Capital India (பின்னர் Peak XV Partners என பெயர் மாற்றப்பட்டது)

Sequoia நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆகாஷ் கபூர், eFishery-யை இந்தோனேசியாவின் மீன்வளத் துறையில் “மறுக்க முடியாத முன்னணி நிறுவனம்” என்று பாராட்டினார்.

SoftBank நிறுவனத்தின் அன்றைய முதலீட்டு இயக்குநர் அன்னா லோ, “உலகின் அதிகரித்து வரும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இந்தோனேசியாவின் மீன்வளத் துறை முக்கிய பங்கு வகிக்க முடியும்,” என்று தெரிவித்தார்.

Series D (2023 நடுப்பகுதி): US$200 மில்லியன்

முன்னணி முதலீட்டாளர்: அபுதாபியின் 42XFund (முன்பு G42 Expansion Fund)

SoftBank, Temasek மற்றும் Northstar ஆகியவையும் இதில் பங்கேற்றன.

இந்த முதலீட்டுக்குப் பிறகு, eFishery நிறுவனத்தின் மதிப்பு US$1.4 பில்லியனைத் தாண்டியது. இதன் மூலம் அது இந்தோனேசியாவின் முதல் Agritech Unicorn நிறுவனமாக உருவெடுத்தது.

இந்த சுற்றில்தான் KWAP முதல் முறையாக முதலீடு செய்தது.

KWAP பின்னர் தாம் ரிம 163.4 மில்லியன் முதலீடு செய்ததை உறுதிப்படுத்தியது. சில அறிக்கைகளின்படி, இந்த தொகை அந்த முதலீட்டு சுற்றின் சுமார் 24% ஆக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 2024-ல் HSBC இந்தோனேசியாவிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர் கடன், மோசடி வெளிச்சத்துக்கு வருவதற்கு முன் eFishery நிறுவனத்தின் நிதி திரட்டலை நிறைவு செய்தது. அந்த நிறுவனத்தில் KWAP உட்பட சுமார் இரண்டு டஜன் நிறுவன முதலீட்டாளர்கள் இணைந்து 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்திருந்தனர்.

என்ன தவறு நடந்தது?

கடந்த ஆண்டு ஏப்ரலில் Bloomberg-க்கு அளித்த ஐந்து மணி நேர நேர்காணலில், நிறுவனத்தின் நிறுவனர் கிப்ரான் (Gibran), 2018-ல் நிறுவனத்தின் பணப்புழக்கம் தீர்ந்து போகும் நிலையில் இருந்ததை காட்டிய ஒரு கணக்குப் பட்டியலை (spreadsheet) பார்த்ததாகவும், நிறுவனம் மூடப்படுவதைத் தடுக்க நிதி விவரங்களை பொய்யாக மாற்ற முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

அவரது சொந்த விளக்கத்தின் படி, அந்த மோசடி 2018-ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. அப்போது நிறுவனம் Series A முதலீட்டு சுற்றை நிறைவு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில், eFishery நிறுவனத்தின் வருமானம் உண்மையை விட அதிகமாக இருப்பதாகக் காட்ட பல போலி (shell) நிறுவனங்களை உருவாக்கி, நிறுவனத்தின் நிதிநிலையை செயற்கையாக மேம்பட்டதாகக் காட்டினார்.

தற்காலிகத் தீர்வாகத் தொடங்கிய இந்த செயல் பின்னர் வழக்கமான நடைமுறையாக மாறியது. நிறுவனத்திற்குள் உண்மையான கணக்குப் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டன; ஆனால் முதலீட்டாளர்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு (auditors) அதிகப்படுத்தப்பட்ட போலிக் கணக்குகள் காட்டப்பட்டன.

2024 இறுதியில், ஒரு தகவல் வெளியிடுபவர் (whistleblower) eFishery இயக்குநர் குழுவை அணுகிய பிறகே இந்த மோசடியின் உண்மையான அளவு தெரியவந்தது. இதையடுத்து, கிப்ரான் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

2025 பிப்ரவரி 6-ஆம் தேதி Bloomberg வெளியிட்ட அறிக்கையின்படி, பல முதலீட்டாளர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட உள்துறை விசாரணையில், 2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கு நிறுவனம் 16 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியதாக முதலீட்டாளர்களிடம் தெரிவித்திருந்தாலும், உண்மையில் 35.4 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது தெரியவந்தது.

அதே காலகட்டத்தில் மட்டும், FTI Consulting Singapore நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, eFishery தனது வருவாயை சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகப்படுத்திக் காட்டியது. அதாவது, அறிவிக்கப்பட்ட வருவாய் விவரங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை போலியாக இருந்தன.

நிறுவனத்தின் செயல்பாட்டு தகவல்கள்கூட பொய்யாக இருந்ததாகக் கூறப்பட்டது. முதலீட்டாளர்களிடம் eFishery நிறுவனம் 400,000 மீன் உணவளிப்பு சாதனங்கள் (fish-feeding devices) பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் உண்மையான எண்ணிக்கை 24,000 மட்டுமே.

இந்தோனேசியாவின் பிற ஸ்டார்ட்அப் நிறுவனர்களுடன் நடந்த உரையாடல்களில், நிறுவனத்தின் நிதி விவரங்களை “சிறிது மாற்றி” (massaging the numbers) காட்டுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கிப்ரான் கூறினார். “எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள்” என்ற எண்ணத்தால், அது சட்டவிரோதமா என்ற கேள்வியே தனக்குள் எழுந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், எந்தப் பணமும் தனிப்பட்ட முறையில் திருடப்படவில்லை என்றும், அனைத்து நிதியும் திறமையான ஊழியர்களை நியமிப்பதற்கும், கமிஷன் வழங்குவதற்கும், கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார். தன்னுடைய முடிவுகள் அனைத்தும் நிறுவனத்தை உயிர்வாழ வைப்பதற்காகவே எடுக்கப்பட்டவை என்றும் கூறினார்.

“பின்னோக்கிப் பார்க்கும்போது, உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில், அது சிறியதாக இருந்தாலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தாக்கமாக இருக்க வேண்டுமென்பதை நான் சிந்திக்கவில்லை,” என்று அவர் கூறியதாக Bloomberg மேற்கோள் காட்டியது.

eFishery நிறுவன நிர்வாகத்திற்கு என்ன நடந்தது?

2025 ஆகஸ்டில், Bloomberg-க்கு கிப்ரான் தனது விளக்கத்தை வெளியிட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இந்தோனேசிய காவல்துறையினர் அவரையும், முன்னாள் இரண்டு நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், கிப்ரான் மீது இந்தோனேசிய குற்றவியல் சட்டத்தின் Article 374 (பணியிலிருக்கும் நிலையில் செய்யப்படும் கையாடல்) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் Article 3 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

eFishery நிறுவனத்தின் சட்டப்பூர்வ அமைப்பான Multidaya Teknologi Nusantara மூலம் நிறுவனக் கணக்குகளை மாற்றியமைக்க கிப்ரான் உத்தரவிட்டதாகவும், இதன் மூலம் 69.47 பில்லியன் இந்தோனேசிய ரூபியா (சுமார் ரிம 15.8 மில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 பில்லியன் ரூபியா அபராதம் விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது.

Bloomberg அறிக்கையின்படி, தன் வாக்குமூலத்தில் கிப்ரான் உணர்ச்சிவசப்பட்டு, தனிப்பட்ட முறையில் எந்தச் செல்வமும் சேர்க்கவில்லை என்றும், இதை குற்றவியல் வழக்காகக் கருத வேண்டாம் என்றும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“நோக்கம், செயல், அல்லது தனிப்பட்ட நிதி ஓட்டம் எதுவும் நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக எனக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பது அநியாயம். இது புதுமையை உருவாக்க விரும்பும் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும்,” என்று அவர் தெரிவித்ததாக Bloomberg கூறியது.

ஆனால், ஏப்ரல் 29-ஆம் தேதி Bandung மாவட்ட நீதிமன்றம் மூவரையும் கையாடல் மற்றும் பணமோசடி குற்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.

கிப்ரானுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 பில்லியன் ரூபியா அபராதம் விதிக்கப்பட்டது. இது அரசுத் தரப்பு கோரிய தண்டனையை விட ஒரு ஆண்டு குறைவாகும்.

மற்ற இரண்டு முன்னாள் நிர்வாகிகளுக்கு முறையே 8 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதே அளவிலான அபராதமும் விதிக்கப்பட்டது.

eFishery நிறுவன முதலீட்டாளர்களுக்கு என்ன நடந்தது?

2025 பிப்ரவரியில் வெளியான தகவலின்படி, FTI Consulting Singapore, eFishery நிறுவனம் ஆரம்பத்தில் கருதப்பட்டதை விட மிகவும் மோசமான நிதிநிலையிலுள்ளதாகக் கண்டறிந்தது. முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு 1 அமெரிக்க டாலருக்கும் 10 சென்டிற்கும் குறைவாகவே மீட்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டின் Series D முதலீட்டு சுற்றில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்த அபுதாபியின் G42 நிறுவனம், மிகவும் மோசமான சூழ்நிலையில் 8.3 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே மீட்கக்கூடும்.

Deal Street Asia வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் Temasek நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ரோஹித் சிபாஹிமலானி (Rohit Sipahimalani), ஆரம்பகட்ட முதலீடுகளில் (early-stage investing) மோசடியை 100 சதவீதம் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் கடினம் என்று கூறினார்.

eFishery சம்பவம் குறித்து Temasek நிறுவனம் “ஆச்சரியமும் ஏமாற்றமும்” அடைந்ததாக அவர் தெரிவித்தார். அதே சமயம், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சின் யீ பங் (Chin Yee Png), Temasek-இன் முதலீட்டு தொகுப்புகள் (portfolio) ஒவ்வொரு ஆண்டும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு (properly marked) பதிவுசெய்யப்படுகின்றன என்று விளக்கினார்.

2026 ஏப்ரல் மாத அறிக்கையில், eFishery-யின் முதல் முதலீட்டாளரான Aqua-Spark நிறுவனத்தின் நிறுவுநர்கள், சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்ததாக தெரிவித்தனர். இதன் விளைவாக, அந்த டச்சு தாக்க முதலீட்டு (impact fund) நிறுவனம் தனது சொந்த மதிப்பீட்டை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்து, சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிட்டது.

Aqua Culture Magazine வெளியிட்ட தகவலின்படி, Aqua-Spark இணை நிறுவுநர் Amy Novogratz இந்த இழப்பை வெறும் நிதி இழப்பாக அல்லாமல், ஆழமான மன உளைச்சலாக விவரித்தார். அவர் கூறியதாவது:

“நீங்கள் முன்மாதிரியாகக் கருதியவர்கள், நீங்கள் நம்பியவர்களாக இல்லை என்பதை அறிந்துகொள்வது, முற்றிலும் வேறுபட்ட வகையான ஒரு மனவேதனையாகும்.”

மேலும், eFishery ஊழல் காரணமாக தென்கிழக்காசியாவின் மீன்வளத் துறைக்குள் (aquaculture) புதிதாக வரத் தொடங்கியிருந்த முக்கிய முதலீடுகள் திடீரென நின்றுவிட்டதாக Aqua-Spark எச்சரித்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அதன் நிறுவுநர்கள் ஒப்புக்கொண்டனர்.

Aqua-Spark-ன் தலைமை முதலீட்டு அதிகாரி Maria Velkova, நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வு (due diligence) நடைமுறைகளை மறுபரிசீலனை செய்தபோதும், “eFishery மிகவும் திறமையாகத் திட்டமிட்டு மோசடி செய்ததால், இதைத் தவிர்க்க அதிகம் செய்ய முடியாது,” என்ற கருத்தை தெரிவித்தார்.

ஜூலை 18 அன்று வெளியிட்ட அறிக்கையில், KWAP, eFishery-யில் செய்த முதலீட்டில் இருந்து அதிகபட்சமாக மீட்கக்கூடிய தொகையை மீட்டெடுக்க அனைத்து சட்ட மற்றும் பிற வழிகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தது. அதோடு, உள்நாட்டு விசாரணை மற்றும் தேவையான மதிப்பாய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம், eFishery நிர்வாகம் திட்டமிட்டு நிதி அறிக்கைகளைப் போலியாக உருவாக்கியதால், KWAP-ன் முதலீடு பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

பல முதலீட்டாளர்களும் கடனளிப்பவர்களும் eFishery-யின் மீதமுள்ள குறைந்த சொத்துகளுக்காக போட்டியிடும் நிலையில், KWAP-ன் முதலீட்டை முழுமையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ மீட்டெடுப்பது மிகவும் கடினம்; அது பல ஆண்டுகள் எடுக்கக்கூடும்.

KWAP உண்மையில் எவ்வளவு இழந்தது – ரிம 163 மில்லியனா அல்லது ரிம 200 மில்லியனா?

பிரதமர் அன்வர் இப்ராஹிம்

DealStreetAsia 2023-இல் வெளியிட்ட தகவலின்படி, Series D முதலீட்டு சுற்றில் KWAP சுமார் 47.7 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM200 மில்லியன்) முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது.

இந்த எண்ணிக்கை பின்னர் பல ஊடகங்களாலும் அதிகாரப்பூர்வ வட்டாரங்களாலும் மேற்கோள் காட்டப்பட்டது.

ஆனால் ஜூலை 15 அன்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப் பதிலில், பிரதமர் அன்வாரோ அல்லது PKR எம்.பி. Wong Chen-ஓ KWAP முதலீட்டின் மொத்தத் தொகையை குறிப்பிடவில்லை.

அதன்பின் ஜூலை 17 அன்று KWAP விளக்கம் அளித்து, eFishery-யில் தாங்கள் முதலீடு செய்த உண்மையான தொகை ரிம 163.4 மில்லியன் என்றும், அது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 2.51% பங்கைக் குறிக்கிறது என்றும் தெரிவித்தது.

ஆனால் மறுநாளே, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மீண்டும் ரிம 200 மில்லியன் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டது. MACC தலைமை ஆணையர் Abd Halim Aman, இந்த முதலீட்டு இழப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஜூலை 20 அன்று MCA தகவல் பிரிவு தலைவர் Chan Quin Er, KWAP இழப்புத் தொகையில் முரண்பட்ட எண்ணிக்கைகள் இருப்பதாகக் கூறி, இதுகுறித்து அரசு தெளிவான விளக்கமும் வெளிப்படைத்தன்மையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதலீடு செய்வதற்கு முன் KWAP தேவையான ஆய்வுகளைச் செய்ததா?

KWAP மற்றும் அரசின் விளக்கப்படி, ஆம் – குறைந்தபட்சம் ஆவணங்களின் அடிப்படையில் அவ்வாறு செய்தது.

MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமன்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அன்வார், உலகின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களும் eFishery-யில் முதலீடு செய்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும், KWAP வெளிநாட்டு நிறுவனங்களில் மட்டுமல்லாமல், பல உள்ளூர் தொடக்க நிறுவனங்களிலும் (startups) முதலீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

KWAP-ன் முதலீட்டு குழு எடுத்த முடிவுகள் நிதி அமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் அதன் இயக்குநர் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.

இயக்குநர் குழுவில் அமைச்சக பிரதிநிதிகள் இருந்தாலும், முதலீட்டு குழு முழுமையாக தொழில்முறை நிபுணர்களால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

KWAP-ன் மற்ற முதலீடுகளைப் போலவே, eFishery முதலீடும் வழக்கமான மதிப்பீடு, சாத்தியக்கூறு ஆய்வு (feasibility study) மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தணிக்கையாளர்களின் (auditors) அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அன்வார் உறுதிப்படுத்தினார்.

ஆனால், பின்னர் தெரியவந்ததாவது, அந்த தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளே மோசடிக்காக போலியாக உருவாக்கப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய மற்றும் அனுபவமிக்க முதலீட்டாளர்கள்கூட இந்த போலி நிதி அறிக்கைகளால் ஏமாற்றப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார்.

eFishery இழப்பு, மற்ற பொதுநிதி ஊழல்களுடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது?

2024 அக்டோபரில், மலேசியாவின் அரசு முதலீட்டு நிறுவனமான Khazanah Nasional மற்றும் Permodalan Nasional Berhad (PNB) ஆகியவை, உள்ளூர் மின்வணிக நிறுவனமான FashionValet-இல் செய்த முதலீட்டில் ரிம 43.9 மில்லியன் இழந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது.

நிதி அமைச்சகத்தின் நாடாளுமன்ற எழுத்துப் பதிலின்படி, Khazanah மற்றும் PNB ஆகியவை 2018-இல் மொத்தம் ரிம 47 மில்லியன் முதலீடு செய்திருந்த நிலையில், 2023-இல் தங்களது பங்குகளை வெறும் ரிம 3.1 மில்லியனுக்கு விற்றன.

இந்த தகவல் DAP நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin எழுப்பிய கேள்விக்கான பதிலாக வெளியிடப்பட்டது. அதன் பின்னர் MACC விசாரணை தொடங்கியது.

விவி யூசோப் மற்றும் ஃபட்ஸாருதீன் ஷா அனுவார்

இறுதியில், FashionValet நிறுவனத்தின் நிறுவுநர்களான Vivy Yusof மற்றும் அவரது கணவர் Fadzaruddin Shah Anuar மீது குற்றவியல் நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust – CBT) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பொது கணக்குகள் குழு (PAC), Khazanah மற்றும் PNB மேற்கொண்ட முதலீடுகளில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாகவும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நிதி மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, KWAP-இன் eFishery முதலீட்டில் ஏற்பட்ட ரிம 163.4 மில்லியன் இழப்பு, FashionValet சம்பவத்தில் ஏற்பட்ட இழப்பை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும்.

இந்த KWAP–eFishery விவகாரம், FashionValet சர்ச்சையின் போது எழுந்த அதே கேள்விகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிதிகள் (Government-Linked Funds) முதலீடுகளை எவ்வளவு கடுமையாக ஆய்வு செய்கின்றன? மேலும், தவறான முதலீடுகளுக்கு உண்மையில் யார் பொறுப்பேற்கிறார்கள்? என்ற கேள்விகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மற்ற அரசியல்வாதிகள் என்ன கூறியுள்ளனர்?

ஜூலை 17 அன்று, ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான ஹசன் அப்துல் கரீம், பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனடியாக நிதி அமைச்சராக உள்ள பதவியில் இருந்து விலகும் “தைரியமான முடிவை” எடுக்க வேண்டும் என்று பொதுவெளியில் வலியுறுத்தினார்.

PKR கட்சியைச் சேர்ந்த அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில், நம்பிக்கைப் பொறுப்பை (fiduciary duty) மீறுதல், அலட்சியம் மற்றும் பொறுப்புணர்வு, கணக்கொப்படைப்பு ஆகிய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பான பிற நபர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பாசிர் குடாங் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம்

பாசிர் கூடாங் தொகுதி எம்.பி.யான ஹசன், 1MDB உலகளாவிய நிதி ஊழலுடன் தொடர்புடைய SRC International விவகாரத்தில் இருந்து KWAP எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். KWAP தரப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் “அலட்சியம்” மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நாளில், Parti Wawasan Negara கட்சியின் துணைத் தலைவர் ஓமர் முஸ்தபா, வரும் அக்டோபர் மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இந்த முதலீடு தொடர்பான முழுமையான அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கிடையில், PAC தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுதின், KWAP-இன் eFishery முதலீடு குறித்து குழு தனிப்பட்ட விசாரணையைத் தொடங்க வேண்டுமா என்பதை PAC விரைவில் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் கவலைப்பட வேண்டுமா?

பிஏசி தலைவர் மாஸ் எர்மியாதி சம்சுதீன்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், ரிம 163.4 மில்லியன் மதிப்பிலான eFishery முதலீட்டு இழப்பை, கடந்த ஆண்டில் KWAP பெற்ற ரிம 12.9 பில்லியன் நிகர லாபத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டில் KWAP-இன் மொத்த நிதி 9.3 சதவீதம் வளர்ச்சி பெற்றதாகவும், அதன் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

அதே நாளில், பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அசீஸ், இந்த தோல்வியடைந்த முதலீடு அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அல்லது KWAP-இன் நிதி நிலைத்தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று உறுதியளித்தார்.

தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்

தனது முகநூல் பதிவில், 2025 ஆம் ஆண்டில் ரிம 195 பில்லியன் மதிப்புடைய KWAP நிதியில், eFishery முதலீடு 0.1 சதவீதத்திற்கும் குறைவானது என்றும், அண்மைய தணிக்கையிடப்பட்ட நிதியாண்டில் பதிவான சுமார் ரிம 18 பில்லியன் முதலீட்டு வருமானத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், KWAP, தனியார் துறை ஊழியர்களுக்கான EPF (Employees Provident Fund) போல அல்ல என்றும், அரசு ஊழியர்களுக்கு KWAP-இல் தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகள் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் அரசுக்கே இருப்பதாகவும், அந்த ஓய்வூதியத்தை அரசின் சார்பில் நிர்வகிப்பதோடு, தனது முதலீட்டு வருமானத்தின் மூலம் ஓய்வூதியச் செலவின் ஒரு பகுதியை நிதியளிப்பதே KWAP-இன் பங்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.