இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அக்கட்சி தீவிர மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அதனை விடுத்து வாக்காளர்களைக் குறைச் சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கக் கூடாது.
மாநில ஆட்சியை தேசிய முன்னணி கைப்பற்றியுள்ள போதிலும் அதன் உறுப்புக் கட்சியான ம.இ.கா. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி பிரதிநிதித்துவம் ஏதும் இல்லாமல் பரிதவிக்கிறது.
முன்னதாக சுமார் 3 வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாஸ் கட்சியோடு கைக் கோர்த்ததால் தேசிய முன்னணிக்குக் கிடைத்த திடீர் அலையில், ‘பூவோடு சேர்ந்த நாராக’த்தான் ம.இ.கா. பயனடைந்ததேத் தவிர சுயமான பலத்தைக் கொண்டு அது ஜெயிக்கவில்லை எனும் உண்மையை அதன் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போன்ற வெற்றி நெகிரி செம்பிலானிலும் கிடைக்காமல் நழுவியதால் விரக்தியடைந்துள்ள அக்கட்சியினர் வாக்காளர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பது ஏற்புடையதாக இல்லை.
எனவே அவர்களுடைய ஜனநாயக உரிமையையும் முடிவையும் ம.இ.கா. மதித்து, ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும். தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது.
இத்தகைய எதிர்மறையான கருத்துகள் ம.இ.கா. மீதான நம் சமூகத்தின் அபிமானத்தை அதிகரிக்கவா போகிறது? ஒரு போதும் இல்லை. விரிசலை மேலும் மோசமாக்கும் என்பதுதான் உண்மை.
பிரதமர் அன்வார் மீது அதிருப்தியைக் கொண்டுள்ள நம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சாரார் பக்காத்தான் ஹராப்பானை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது ஏதோ உண்மைதான்.
ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று ம.இ.கா. எதிர்பார்ப்பது கொஞ்சமும் விவேக சிந்தனைக்கு எட்டாத ஒன்றாகும்.
இந்திய சமூகத்தின் ஆதரவு ம.இ.கா. பக்கம் திரும்பிவிட்டது என தம்பட்டம் அடித்துக் கொள்வதெல்லாம் வெறும் வீண் புரளியைப் போல்தான் உள்ளது. அந்தக் கூற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
எனவே தங்களுடைய வேட்பாளர்களுக்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை, வெற்றி கிட்டவில்லை என்பதற்காக வாக்காளர்கள் மீது கோபப்படுவதில் அர்த்தமே இல்லை, நியாயமுமில்லை.
முறையான, விரிவான மீளாய்வு செய்து, களத்தில் இறங்கி மக்களின் குறைகளைக் கலைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே விவேகமான அரசியலாகும்.
இதற்கிடையே மாநில ஆட்சியில் இந்திய பிரதிநிதிகள் இல்லை என்பதற்காக நம் சமூகத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படாது. மாநில அரசு நமக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு வழிமுறைகள் நிறையவே உள்ளன. அதை நடைமுறையாக்க ம இ கா புதிய வியூகங்களை கையாள் வேண்டும்.
கடந்த காலங்களில் இந்ந்தியர்களின் சமூக பொருளாதர பின்னடைவு காரணமாக தெருப்போராட்டம் நடத்திய எதிர்கட்சிகள் போல மாஇ கா-வின் இளைஞர் பகுதி களத்தில் இறங்க முன் வர வேண்டும்.
ஒரு சிறுபான்மை இனத்தின் குரல், ஆட்சி செய்பவர்களின் காதில் விழ வேண்டுமானால், நாம கற்ற அரசியல் பாடம் உரிமை கோரி தெருவில் இறங்குவதுதான்.
























