நெகிரி செம்பிலான் பள்ளி மாணவர் மரணம்: மரண விசாரணை அடுத்த மாதம் தொடக்கம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிரம்பான், செனவாங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த 10 வயது சிறுவன் ஈமான் ஜாஃப்ரான் அப்துல்லாவின் மரணம் குறித்த மரண விசாரணை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்த மரண விசாரணைக்கு உதவும் அதிகாரி நொராசிஹா அஸ்முனி, மரண விசாரணை அதிகாரி தஸ்னிம் அபு பக்கரிடம் தெரிவிக்கையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்கள் உட்பட மொத்தம் 51 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று கூறினார் என புலெட்டின் டிவி3  செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த மரண விசாரணையை நடத்துவதற்கு தஸ்னிம் ஏழு நாட்களை ஒதுக்கீடு செய்துள்ளார் – அதன்படி செப்டம்பர் 14, செப்டம்பர் 21, அக்டோபர் 5 முதல் 7 வரை, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 28 ஆகிய தேதிகளில், ஒவ்வொரு அமர்வும் மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் யாசித், சாட்சிகளை விசாரணை செய்ய அவருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார்.

மேலும், ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும், அதன் பிரதிகளை வழக்கறிஞர்களுக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கும் வழங்குமாறும் அவர் நீதிமன்றத்தின் விவேகமான முடிவைக் கோரினார்.

இந்த விஷயத்தின் உணர்திறனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம், எனவே ஆவணங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும், என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஹாஃபிசுதீன் அப்துல்லா (41), மற்றும் தாய் ஜுசிதா முரிப் சகிதா ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

ஈமான் கடந்த 2025 அக் 1 அன்று தனது பள்ளியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் மதியம் 12.10 மணிக்கு வகுப்பறையை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் பள்ளி வளாகத்திற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 2 அன்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் வேறு காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், கழுத்தில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் இந்த மரணத்தில் கொடுமைப்படுத்துதல் (bullying) அல்லது வம்புசெய்தல் நடந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், மொத்தம் 49 சாட்சிகளிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

 

 

 

-fmt