அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை ஒருங்கிணைத்ததாக 27 வயதான சின் ஹோக் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சின் ஹாக் கான் சிங்கப்பூர் காவல் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுகிறார்.
சிங்கப்பூரில் பணமோசடி நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 27 வயது மலேசியர் ஒருவர், இன்று அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றும் மோசடி சம்பவத்தை சின் ஹோக் கான் (Chin Hock Khan) என்பவர் ஒருங்கிணைத்ததாகவும், மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட மலேசியர்களை அவர் பணியமர்த்தியதாகவும் சிங்கப்பூர் காவல் துறை (SPF) தெரிவித்தது.
1992-ஆம் ஆண்டின் ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடுமையான குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 51-ன் கீழ் சின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,00,000 சிங்கப்பூர் டாலர் (மலேசிய ரிங்கிட் 1.6 மில்லியன்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று புக்கிட் அமானின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய தினமே சிங்கப்பூர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சின், மலேசியாவில் உள்ள குறைந்தது நான்கு மலேசிய முகவர்களை (runners) பலமுறை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேலைகளை ஒதுக்கீடு செய்தல், ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுப்பதை ஒருங்கிணைத்தல் மற்றும் பணிக்கான ஊதியத்தை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
அவரது உத்தரவின் பேரில், இந்த முகவர்கள் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தங்கப் பொருட்களை ஜொகூர் பாருவுக்குக் கொண்டு சென்று அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
“சின், மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட குறைந்தது S$500,000 தொகையை பணமோசடி செய்ததற்கு பொறுப்பானவர் என நம்பப்படுகிறது,” என்று அது தெரிவித்தது.
மோசடி கும்பல்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைச் சேகரிக்கவும் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சிங்கப்பூர் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
“மோசடிகளில் ஈடுபடும் எவர் மீதும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், மேலும் குற்றவாளிகள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்படுவார்கள்,” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
























