மதமாற்றம் காரணமாக முஸ்லிமாக மாறியவர், முஸ்லிம் அல்லாத பெற்றோரிடமிருந்து வாரிசுரிமை பெறுவதைத் தடுக்காது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம், முஸ்லிம் அல்லாத தனது உயிரியல் தந்தையின் சொத்துரிமையைப் பெறுவதிலிருந்து அமீரா உமைரா தெங் அப்துல்லாவைத் தடுக்கும் வகையில், மரபுரிமை பகிர்வு தொடர்பான சட்டங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது.
முஸ்லிம் அல்லாத தனது மறைந்த தந்தையின் சொத்தில் இருந்து வாரிசுரிமை பெறும் முஸ்லிம் பெண்ணின் உரிமையை உறுதி செய்த கீழமை நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த வாரம் நீதிபதி சுபாங் லியான் தலைமையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சட்டங்களான பங்கீட்டு சட்டம் (Distribution Act) மற்றும் சிறிய சொத்துகள் (விநியோகம்) சட்டம் (Small Estates (Distribution) Act) ஆகியவை அமிரா உமைரா தெங் அப்துல்லா தனது உயிரியல் தந்தையின் சொத்தில் இருந்து பங்கு பெறுவதைத் தடுக்கவில்லை என்று தீர்ப்பளித்தது.
இந்த அமர்வில் மற்ற நீதிபதிகளாக அமர்ஜீத் சிங் மற்றும் ஷஹ்னாஸ் சுலைமான் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், தனது மகளின் வாரிசுரிமையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அமிராவின் முஸ்லிம் அல்லாத தாயார் வீ கூ விங், நீதிமன்றச் செலவாக ரிம 30,000 செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி விவரங்களின்படி, அமிரா 2008ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறி, ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்துகொண்டார். அவர் தெங் குவான் சாய் மற்றும் வீ ஆகியோருக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் நான்காவது குழந்தை ஆவார்.
2020ஆம் ஆண்டு தெங் உயிரிழந்த பிறகு, அவரது சொத்துகளை வாரிசுகளுக்கு சமமாகப் பகிர்ந்து வழங்குமாறு வீ, கிளந்தான் நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், தெங்கின் ஏழு பிள்ளைகளின் பட்டியலில் இருந்து அமிராவை வீ நீக்கினார்.
இந்த மனுவை அறிந்த அமிரா, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, சொத்து பகிர்வு உத்தரவையும், வீயை சொத்து நிர்வாகியாக நியமித்ததையும் ரத்து செய்யக் கோரினார்.
உயர் நீதிமன்றம் அமிராவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. பங்கீட்டு சட்டத்தை இயற்றியபோது, வேறு மதத்திற்கு மாறிய குழந்தை தனது மறைந்த பெற்றோரின் சொத்தில் இருந்து வாரிசுரிமை பெறுவதைத் தடுக்க நாடாளுமன்றம் ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
“ஒரு சொத்தின் பகிர்வில் குழந்தையின் மத நிலையை அடிப்படையாகக் கொண்டு சட்டம் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அமிராவின் சார்பில் வழக்கறிஞர்கள் அடிப் சாட் மற்றும் சுல்ஹஃபிஸ் சாஹித் ஆஜரானார்கள். வீ கூ விங்கின் சார்பில் லுவா கோக் ஹியோங் ஆஜரானார்.
























