அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தலுக்காகப் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு, தொகுதிப் பங்கீட்டு இடமாற்றங்களைச் செய்ய பெரிக்காத்தான் நேசனல் தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரு கூட்டணிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்று குறிப்பிட்ட சம்சூரி, மலாக்கா மாநிலத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படக்கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் பெரிக்காத்தான் கூட்டணி தயாராகவே உள்ளது.
மாநிலத் தேர்தல் வர இன்னும் காலம் இருப்பதால் பெரிக்காத்தான் தலைமைத்துவத்திற்குள்ளோ அல்லது நமது நண்பர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தப் போதிய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பேசத் தயாராக இருந்தால், நாங்களும் தயாராகவே இருக்கிறோம், என்று அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலையான மாநில அரசாங்கத்தை அமைப்பதற்குப் பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று, பாரிசான் நேசனல் தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி கூறுகையில், கூட்டணி பங்காளிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் பட்சத்தில், தொகுதி இடமாற்றங்கள் உட்பட மலாக்கா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தங்கள் கூட்டணி தயாராகவே உள்ளது என்றார்.
எந்தவொரு கட்சியினாலும் வெற்றி பெறப்பட்ட தொகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை அரசியல் கூட்டணிகளிடம் சாதாரணமாக ஒப்படைத்துவிடக் கூடாது என்றும் ஜாகித் கூறினார்.
கடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற 21 தொகுதிகளையும் தற்காத்துக் கொள்ள பாரிசான் கூட்டணி உத்தேசித்துள்ளதாக அம்னோ தலைவர் இதற்கு முன்பு கூறியிருந்தார். மாநிலத்தின் கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் ஜெயலானி காமிஸ் அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது பாரிசான் வசம் 20 தொகுதிகள் மட்டுமே உள்ளன.
-fmt
























