பூமிபுத்ரா அல்லாத சரவாக் மக்களுக்காக புதிய பரஸ்பர நிதி அமைப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசின் ஆதரவு பெற்ற அமானா சஹாம் சரவாக் நிறுவனத்தை சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபெங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இரண்டாவது நிதி அமைப்பு, பூமிபுத்ரா அல்லாத சரவாக் மக்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்சிக்குத் தேவையான கூடுதல் மூலதனத்தையும் உருவாக்கக்கூடும் என்று போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று கூச்சிங்கில் நடைபெற்ற அஸாரின் 2026ஆம் ஆண்டிற்கான லாபப்பங்கு அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில், ASB அமைப்பில் ஏஎஸ்பி 1 மற்றும் ஏஎஸ்பி 2 இருப்பது போல, அஸாரிலும் நாம் அஸார் 1 மற்றும் அஸார் 2 ஆகியவற்றை உருவாக்கலாம். இது பூமிபுத்ரா அல்லாதவர்களும் இந்த பரஸ்பர நிதியத்தில் பங்கேற்க வழிவகுக்கும் என்று கூறினார்.
அஸார் பரஸ்பர நிதியத்தை S Pay Global டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளத்துடன் இணைக்கவும் அவர் முன்மொழிந்தார். இதன் மூலம், சரவாக் மக்கள் வெறும் 10 ரிங்கிட் போன்ற குறைந்த தொகையிலிருந்தும் முதலீடு செய்ய முடியும் என்பதால் பரவலான பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.
சரவாக்கின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், ஆழ்கடல் துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் அஸார் நிறுவனம் எதிர்காலத்தில் முதலீடு செய்யக்கூடும் என்றும் அபாங் ஜொஹாரி கூறினார்.
முதலீட்டாளர்களுக்கு வருமானத்தையும் நிலையான நிதி ஆதாயங்களையும் உருவாக்கும் நோக்கில் 1992 ஆம் ஆண்டு அஸார் நிறுவனம் நிறுவப்பட்டது.
ஜூன் 30, 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கு அஸார் நிறுவனம் ஒரு யூனிட்டிற்கு 6.5 சென் லாபப்பங்கை அறிவித்துள்ளது. இது மலேசியாவின் பரஸ்பர நிதி அமைப்புகளிலேயே மிக உயர்ந்ததாகும் என்று அபாங் ஜொஹாரி குறிப்பிட்டார்.
-fmt
























