குடிபோதையில் அண்டை வீட்டாரைத் தாக்கிய நபர் கைது

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக சுங்கை புலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோம்பாக் மாவட்ட காவல்துறைத்  தலைவர் இப்ராஹிம் ஹுசின் கூறுகையில், ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று மது போதையில் இருந்த ஒருவர், தனது அயலவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் காவல்துறை அவரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் இப்ராஹிம் ஹுசைன் கூறுகையில், ஜூலை 11 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில், மது போதையில் இருந்த அந்த நபர் திடீரென தனது அயலவரின் வீட்டிற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

“அந்த தகராறின்போது, சந்தேகநபர் புகார்தாரரின் குடும்பத்தினரை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதன் விளைவாக, இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக சுங்கை புலோ மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பப்பட்டனர்”.

“இன்று மதியம் சுமார் 12 மணியளவில் சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விசாரணைக்காக சம்பவத்துடன் தொடர்புடைய பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக, நாளை அவரை காவலில் வைத்து விசாரிக்க (ரிமாண்ட்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு, ஆபத்தான ஆயுதத்தை பயன்படுத்தி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இப்ராஹிம் ஹுசைன் மேலும் தெரிவித்தார்.