சூப்பர் எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு 90%-க்கும் மேல் உள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ‘மிகவும் வலுவான’ எல் நினோ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அத்துறை தெரிவிக்கிறது.

மெட்மலேசியா (MetMalaysia) தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் கூறுகையில், தற்போதைய உலகளாவிய காலநிலை நிலவரங்கள், 2026–2027 ஆம் ஆண்டின் எல் நினோ (El Niño) நிகழ்வு இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் “சூப்பர் எல் நினோ” ஏற்படுவதற்கான வாய்ப்பு 90%க்கும் அதிகமாக உள்ளது. இதனால் அதிக வெப்பமும் வறண்ட காலநிலையும் ஏற்படும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.

அத்துறையின் தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் கூறுகையில், ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து Relative Oceanic Niño Index (RONI) எனப்படும் குறியீட்டில் குறிப்பிடத்தக்க உயர்வும், சமீபத்திய வாராந்திரக் கண்காணிப்புகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை நீண்டகால சராசரியை விட 1.8°C-க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதும் இந்தக் கணிப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலைமை எல் நினோ தொடர்ந்து வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது. மேலும், இது 2026ஆம் ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சர்வதேச காலநிலை மாதிரிகளின் சமீபத்திய கணிப்புகளின்படி, 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எல் நினோ மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான வாய்ப்பு 90%க்கும் அதிகமாக உள்ளது,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

2026–2027ஆம் ஆண்டுக்கான எல் நினோ, இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும், அதன் தாக்கம் 1997–1998 மற்றும் 2015–2016 காலகட்டங்களில் ஏற்பட்ட மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வுகளின் தாக்கத்தை விட அதிகமாகவோ அல்லது குறைந்தபட்சம் அதற்கு இணையாகவோ இருக்கக்கூடும் என்றும் ஹிஷாம் கூறினார்.

1997–1998 எல் நினோ காலத்தில் மலேசியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.1°C ஆகும். இது 1998 ஏப்ரல் 9 அன்று பெர்லிஸில் உள்ள சுப்பிங்கில் பதிவானது.

அதேபோல், 2015–2016 எல் நினோ காலத்தில், 2016 ஏப்ரல் 10 அன்று பகாங் மாநிலம் ஜெராந்துட்டில் 39.3°C வெப்பநிலை பதிவானது.

“முந்தைய எல் நினோ நிகழ்வுகளின் வடிவங்களையும், சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலகளாவிய வெப்பமயமாதலின் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டால், இந்த முறை வெப்பநிலை அதிகரிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை மேலும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.

மேலும், வலுவான எல் நினோ நிகழ்வுடன் நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (Positive Indian Ocean Dipole – IOD) ஏற்படக்கூடும் என்றும் ஹிஷாம் தெரிவித்தார்.

இதனால், மலேசியா உள்ளிட்ட பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைவது மேலும் தீவிரமடையக்கூடும் என்று அவர் கூறினார்.