பினாங்கில் 14 இணைய மோசடி அழைப்பு மையங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை – 141 பேர் கைது.

பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டென்னிஸ் லிம் கூறுகையில், இந்தக் கும்பல்கள் தீவைத் தளமாகக் கொண்டு, முக்கியமாக வெளிநாடுகளில் உள்ளவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டுள்ளன. குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாடகை வீடுகளில் இருந்து செயல்பட்டு வந்த மோசடி கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில பொருட்களைக் காட்டும் பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டென்னிஸ் லிம்

அக்டோபர் 9 முதல் 29ஆம் தேதி வரை பினாங்கு மாநிலத்தில் பல்வேறு இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அழைப்பு மையங்களில் 14 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், ஒன்பது உள்ளூர்வாசிகள் உட்பட 141 பேரைப் பினாங்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டென்னிஸ் லிம் கூறுகையில், மாநில வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், திமூர் லாவுட் மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், பாராட் டாயா மாவட்டத்தில் ஆறு இடங்களிலும், செபராங் பிறை தெங்கா மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

“இந்தச் சோதனைகளின்போது, 93 சீனப் பிரஜைகள், 29 வியட்நாமியர்கள், நான்கு ஜப்பானியர்கள், மூன்று தைவானியர்கள், இரண்டு கம்போடியர்கள், மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒன்பது உள்ளூர்வாசிகள் என மொத்தம் 141 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வயது 18 முதல் 48 வரை இருக்கும்.

அவர்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது மோசடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள். முதலீட்டு மோசடி, காதல் மோசடி, காவல்துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் இல்லாத வேலைவாய்ப்புகளை இருப்பதாகக் கூறி ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

“இதற்காக வாட்ஸ்அப், டெலிகிராம், வீசாட், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் டிக்டாக் போன்ற பல்வேறு சமூக ஊடகத் தளங்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இந்த மோசடிக் கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக நம்பப்படுவதாக லிம் கூறினார். பினாங்கைத் தளமாகக் கொண்டு, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளவர்களைக் குறிவைத்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மோசடிக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், இணைய வழித்தடக் கருவிகள் (Router), மின்னணு சாதனங்கள் மற்றும் கணினி உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரிம 1.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளுடன் சட்டப்பூர்வமாக மலேசியாவுக்குள் நுழைந்திருந்தாலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக குடிநுழைவு அனுமதிச் சீட்டுகள் மற்றும் வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு 120B ஆகியவற்றின் கீழும், குடிநுழைவுச் சட்டம் 1959/63இன் பிரிவு 6(3) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.