சபா மற்றும் சரவாக்கில் 750 நிரந்தர மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சுகாதார அமைச்சு தயாராக உள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை மீண்டும் பொதுச் சேவைக்கு ஈர்ப்பதற்கு இந்த சலுகை போதுமானதாக இருக்காது என்ற கவலை எழுந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் துறைக்கு மாறிய அனுபவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகளுக்கு ஆரம்ப நிலை ‘UD10’ கிரேடு சலுகை ஈர்ப்புடையதாக இருக்காது என்று மருத்துவர்கள் பிரதிநிதித்துவக் குழுக்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இன்று காலை மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னர் அமைச்சில் பணியாற்றிய ஒரு மருத்துவர் மலேசியாகினியிடம் கூறுகையில், UD10 கிரேடின் ஆரம்பச் சம்பளம் ரிம 3,840 ஆகும் என்றார்.
நாடாளுமன்ற கேள்வி-பதில் நேரத்தின் போது, மூத்த மருத்துவர்கள் இந்த சிறப்புத் திட்டத்தில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த சம்பள விகிதம் மற்றும் நன்மைகளுக்கான அமைப்புகளின் முன்மொழிவுகளை அமைச்சு பரிசீலிக்குமா என்று ராம்கார்பால் சிங் (ஹரப்பான்-புக்கிட் குளுகோர்) சுகாதார அமைச்சர் சுல்கெஃப்ளி அகமட்டிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சுல்கெஃப்ளி, சுகாதார ஊழியர்களின் நலனுக்கு அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், அந்த ஆலோசனைகளைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
“துணை சபாநாயகர் அவர்களே, எங்கள் ஊழியர்களின் நலன் தொடர்பான விஷயங்களை நான் குறித்துக் கொண்டுள்ளேன். புக்கிட் குளுகோர் முன்வைத்த கோரிக்கை அல்லது முன்மொழிவைப் பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நம்புகிறேன். நன்றி,” என்று அவர் கூறினார்.
முன்னதாக இன்று, கிழக்கு மலேசியாவில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க 750 புதிய நிரந்தர பணியிடங்களைக் கொண்டுவரும் அமைச்சின் நடவடிக்கையை ‘ஹார்த்தால் டொக்டர் கொந்த்ராக்’ (Hartal Doktor Kontrak) மற்றும் ‘யாபாசான் அபிமெடிக்’ (Yayasan AbiMedik) ஆகிய அமைப்புகள் வரவேற்றதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், போதுமானதாக இல்லாத சம்பள சலுகையை மறுபரிசீலனை செய்யுமாறு அவை அமைச்சை வலியுறுத்தின.
சபா மற்றும் சரவாக்கில் நிரந்தர மருத்துவ அதிகாரிகளுக்கான அமைச்சின் இந்த சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கை, டிசம்பர் 5, 2016 மற்றும் அக்டோபர் 14, 2024 ஆகிய தேதிகளுக்கு இடையில் ஹவுஸ்மேன்ஷிப் (Housemanship) பயிற்சியை மேற்கொண்ட ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு (அமைச்சடனான ஒப்பந்தம் முடிவடைந்தவர்கள் உட்பட) திறக்கப்பட்டுள்ளது.
பின்னர், டான் ஹோங் பின் (ஹரப்பான்-பக்ரி) சுகாதார சேவை ஆணையத்தை (Health Services Commission) அமைப்பதை விரைவுபடுத்துமாறு புத்ராஜாயாவை வலியுறுத்தினார்.
2027 விநியோக மசோதா (வரவு செலவுத் திட்டம்) மீதான குழு அளவிலான விவாதத்தின் போது, ஜனநாயக செயல் கட்சியின் (DAP) நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சுகாதார ஊழியர்களின் எந்தவொரு தொழில் முன்னேற்றமும் அதற்கேற்ற ஊதியம் மற்றும் பொருத்தமான பதவிகளால் ஆதரிக்கப்படுவதை பொது சேவைத் துறையும் (JPA) நிதி அமைச்சும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர நிலைக்கு மாறுவது என்பது அவர்களின் பொருத்தமான பணி அனுபவம், தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
























