சுங்கை பூலோவில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பெருக்குக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். 12 மில்லியன் ரிங்கிட் செலவிலான தற்காலிக நீர் தேக்கக் குளம் அமைப்பதும் அடங்கும் என்று வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமன்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் நிறைவடையும் வரை, இந்த நீர் தேக்கக் குளம் ஒரு குறுகிய கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
நேற்று பெய்த கனமழை காரணமாக சுங்கை பூலோவில் உள்ள கம்போங் மெலாயு சுபாங் மற்றும் ஷா ஆலமில் உள்ள டிடிடிஐ ஜெயா உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்பைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளைக் காணுமாறு பிரதமர் அன்வார் இப்ராகிம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமன்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 700 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் இவை 2029-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, மேலும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை ஒரே இரவில் சரிசெய்துவிட முடியாது, என்று இன்று கம்போங் மெலாயு சுபாங்கில் உள்ள சியான்டான் (Siantan) மண்டப வெள்ள நிவாரண மையத்திற்கு அன்வாருடன் சென்றிருந்த ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரண்டு வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் பணிகள், அதில் அடங்கியுள்ள கூறுகளைப் பொறுத்து 30 முதல் 60 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக ரமணன் தெரிவித்தார். இதில் சில பணிகள் மத்திய அரசாங்கத்தாலும், மீதமுள்ள பணிகள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் ஒரு மாத காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட நான்காவது திடீர் வெள்ளப்பெருக்கு நேற்றைய சம்பவமாகும் என்றும், இதனால் கிட்டத்தட்ட 550 வீடுகளும் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வேகமாக ஏறி வடிந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் இன்னமும் சேதமடைந்து வருகின்றன. இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் மூலம் இத்தகைய சம்பவங்களை நாங்கள் குறைக்க விரும்புகிறோம்.
பாதிக்கப்பட்ட வீடுகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கின; அதே வேளையில் சமூக நலத்துறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளையும் வழங்கியுள்ளது என்று ரமணன் கூறினார்.
-fmt
























