கடல் அலைகள் கொந்தளிக்காத நாளே இல்லை என்கிறார் ஜிபிஎஸ் தலைவர்.
PDP கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் GPS தலைவர் அபாங் ஜொஹாரி ஓபெங்கிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் தோழமை உணர்வுடன் தீர்த்துக்கொள்ள முடியும் என்று சரவாக் கட்சிகளின் கூட்டணியான கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) தலைவர் அபாங் ஜொஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார்.
“கடல் என்றாலே அலைகள் கொந்தளிக்காமல் இருக்காது. இருப்பினும், இத்தகைய கருத்து வேறுபாடுகளைத் தோழமை உணர்வுடன் தீர்த்துக்கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.
டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள சரவாக் மாநிலத் தேர்தலில், தனது கட்சி போட்டியிடும் எட்டு தொகுதிகளையும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் தியோங் கிங் சிங்கின் வேண்டுகோள் குறித்துப் பதிலளிக்கும்போது அபாங் ஜொஹாரி இவ்வாறு தெரிவித்தார்.
சரவாக்கின் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதில் GPS கூட்டணி ஒற்றுமையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம் என்று அபாங் ஜொஹாரி கூறினார்.
“மாநில அளவில் இந்தத் தோழமை உணர்வு நிலவ வேண்டும். அப்போதுதான் நிலைத்தன்மையைப் பேண முடியும். இல்லையெனில், மலேசியாவுக்கும் சரவாக்குக்கும் மிகவும் அவசியமான நிலைத்தன்மையை வழங்குவதற்கான தோழமை உணர்வு பாதிக்கப்படலாம்,” என்று இன்று கூச்சிங்கில் நடைபெற்ற மாநிலத் தேர்தலுக்கான GPS தேர்தல் பணிக்குழுவைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கூறியதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், PDP தேர்தல் பணிக்குழுவினரின் செயல்பாடுகளும், கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பும் இணைந்து, GPS கூட்டணியில் PDP வசமுள்ள எட்டு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்யும் என்று தியோங் இன்று முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான வயது உள்ளிட்ட நிபந்தனைகள் குறித்து கூட்டணித் தலைமையின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, தனது கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் அபாங் ஜொஹாரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாநிலத் தேர்தலில் PDP தனது எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவை தாசிக் பிரு, மெலுவான், கிரியான், மருடி மற்றும் டுடோங் ஆகிய தொகுதிகளாகும்.
இதற்கிடையே, பார்ட்டி சரவாக் பெர்சத்து (PSB) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக PDP கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டதன் மூலம் பாவாங் அசான், எங்கிலிலி மற்றும் பாக்கெலாலான் ஆகிய மூன்று தொகுதிகளும் PDP வசமானது.























