3R விவகாரங்கள் தொடர்பான சில விசாரணைகள் நீண்டகாலம் எடுத்துக்கொள்வதை அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டால், இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு 1948ஆம் ஆண்டின் தேசநிந்தனைச் சட்டத்திற்கு (Sedition Act) மாற்றாக வேறு வழி எதுவும் தற்போதைக்கு இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். எனினும், அச்சட்டம் குறித்து தமக்கே சில தயக்கங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தேசநிந்தனைச் சட்டம் குறித்து பலரும் கவலைகளை எழுப்பியுள்ளனர். நானும்கூட அதில் ஒருவர். ஆனால், இதற்கு மாற்றான தீர்வு எங்களிடம் இல்லை,” என்று மக்களவையில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது அவர் கூறினார்.
பிற மதங்களை அவமதிப்பது பொறுத்துக்கொள்ளப்படுவதாகவும், ஆனால் இஸ்லாம் மதத்தை அவமதிப்பது மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும் நிலவும் கருத்தைத் தாம் அறிந்திருப்பதாக அன்வார் கூறினார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இதேபோன்ற கருத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“ஆனால், நாம் உண்மையிலேயே நல்லிணக்கத்தைப் பேண விரும்பினால், எந்தவொரு மதத்தையும் அவமதிக்க அனுமதிக்கக் கூடாது,” என்றார்.
சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருந்தால், இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் அன்வார் கூறினார்.
இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான விவகாரங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார். அதேவேளையில், சில விசாரணைகள் முடிவடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை அவர் ஒப்புக்கொண்டார்.
முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, சிலாங்கூர் சுல்தான் மற்றும் பன்றி வளர்ப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்த விசாரணை, மற்ற விவகாரங்களுடன் ஒப்பிடுகையில் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது என்று ரோசோல் வாஹிட் (பிஎன்-ஹுலு திரெங்கானு) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அன்வார் இவ்வாறு கூறினார்.
டோனி புவாவின் கருத்துகளைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
“சில விசாரணைகள் மெதுவாக நடைபெறுகின்றன, சில தாமதமாகின்றன. இது தொடர்பாக உள்துறை அமைச்சுடனும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுடனும் ஆலோசிக்கலாம்,” என்றார்.
அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களில் விசாரணைகள் பொதுவாக விரைவுபடுத்தப்படுவதாகக் கூறிய அவர், எனினும் எல்லா வழக்குகளிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டிருந்தால், அவரை விசாரிப்பதிலிருந்தோ அல்லது காவல்துறை விசாரணைக்கு உட்படுத்துவதிலிருந்தோ யாருக்கும் விலக்கு அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்வதற்கு வசதியாக, திரெங்கானுவில் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகளை மூடுவதற்கு எதிராக கூ போய் தியோங் (பிஎச்-கோத்தா மலாக்கா) தெரிவித்த விமர்சனத்துடன் தாம் உடன்படவில்லை என்றும் அன்வார் கூறினார்.
கூ மன்னிப்புக் கோரியிருந்தாலும், இவ்விவகாரம் தொடர்பாக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பதை காவல்துறையே தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.























