2023-ஆம் ஆண்டு முதல் 2026 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், மலேசியாவில் உள்ள பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இணைய மோசடியாளர்கள் 7.33 பில்லியன் ரிங்கிட்டைச் சுருட்டியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் காவல்துறையினர் 192,869 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும், இதன் விளைவாக 75,266 பேர் கைது செய்யப்பட்டு 69,665 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும், 1.56 பில்லியன் ரிங்கிட் இழப்பை உள்ளடக்கிய 56,802 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் (PH-Klang) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சைபுதீன், 2023-ஆம் ஆண்டு முதல் முதலீட்டுத் திட்ட மோசடிகளே மிக அதிகபட்சமாக 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு மோசடிகள் 2.13 பில்லியன் ரிங்கிட் மற்றும் இணையவழிப் பொருள் கொள்முதல் மோசடிகள் 509 மில்லியன் ரிங்கிட் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் 6 பேர் பெண்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் தனியார் துறை ஊழியர்களே மிகப்பெரிய பிரிவினராக உள்ளனர்.
இதே காலகட்டத்தில், திருடப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட 254,546 ‘மியூல் கணக்குகள்’ காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பல கணக்குகள், மோசடியாளர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த மாணவர்களுக்குச் சொந்தமானவை என்பது தெரியவந்துள்ளது.
பணத்தை மீட்பதற்கு முன்பாக, பல வங்கிக் கணக்குகளின் வழியாக அதனைப் பரிமாற்றம் செய்வதற்கு மோசடியாளர்களுக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுவதாக சைபுதீன் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் முதல் தொலைபேசி அழைப்பு மிகவும் முக்கியமானது, என்று கூறிய அவர், ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக 997 என்ற எண்ணில் தேசிய மோசடி தடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் இம்மையத்திற்கு 30,000 அழைப்புகள் வந்துள்ளதாகவும், இது சராசரியாக ஒரு நாளைக்கு 1,000 அழைப்புகள் என்றும் குறிப்பிட்ட அவர், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிகரித்ததே இதற்கு ஒரு காரணம் என்றும் தெரிவித்தார்.
-fmt























