முன்னாள்-சிபிஎம் தலைவர் சின் பெங் காலமானார்

cp-hk001மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் இன்று தாய்லாந்து, பேங்கோக் மருத்துவமலையில் காலமானார்.

பேங்கோக் போஸ்ட் நாளிதழின் தகவல்படி அவர் காலை மணி 6.20 அளவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓங் பூன் ஹுவா என்ற இயற்பெயர் கொண்ட சின் பெங் 1924 ஆம் ஆண்டில் சித்தியவானில் பிறந்தார். தமது 23 ஆவது வயதில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தியதற்காக அரசாங்கத் தரப்பினர் அவரை வெகுவாக வெறுத்தனர். அப்போராட்டத்தில் ஏராளமான மலேசிய மக்கள் கொல்லப்பட்டனர் என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.

ஆனால், வரலாற்று வல்லுனர்களின் கருத்துப்படி சின் பெங்கிற்கு வரலாற்றில் இடமுண்டு. அவரது தலைமையில் கம்யூனிஸ்ட் போராளிகள் நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், பிரிட்டீஷ் காலனித்துவாதிகளையும் எதிர்த்துப் போராடியுள்ளனர்.

மலேசிய மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி 1989 ஆம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சின் பெங் தொடர்ந்து தென் தாய்லாந்தில் வாழ்ந்து வந்தார்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மலேசியாவிற்கு திரும்பி வருவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மலேசிய நீதிமன்றம் அவரது கோரிக்கை மனுவை நிராகரித்து விட்டது.

TAGS: