லேனாவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 20, 2013.

m-kulasegaranகோமாஸ் என்ற மலேசிய அரசு சார்பற்ற அமைப்பின் அதிகாரி லேனா ஹென்றி 2002ம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தின் 6 (1)(B) பிரிவின் கீழ் , தணிக்கை செய்யப்படாத காணொளி  ஒன்றிணை திரையிட்டதிற்காக கைது செய்யப்பட்டு  மாஜிஸ்ட்ரெட் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து கூடிய பட்சம் 30 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதமோ அல்லது கூடியபட்சம் 3  ஆண்டுச் சிறைத் தண்டனை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

 

லேனாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி  மனித உரிமைக்கும் பேச்சுரிமைக்கும்  எதிரானதாக அமைகின்றது.

 

நான் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் 3.6. 2013 இல்  No Fire Zone  என்ற அந்தக் காணொளி   திரையிடப்பட்ட போது அது உள்நாட்டு அமைச்சின் குழுவினரால் சோதனை செய்யப்பட்டது. அச்சோதனையின் பின்னணியில் பல கேள்விகளை எழும்பத் தொடங்கியுள்ளன .

அதில் முக்கியமாக, இந்த நாட்டை ஆள்வது ஸ்ரீ லங்காவா  அல்லது மலேசியாவா? என்ற கேள்வி முக்கியமானது.

 

இந்த ஆவணக் காணொளியானது தமிழ் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாகவோ அல்லது அங்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்களைப் பற்றிய சிறப்புப் கண்ணோட்டத்தை கொண்டதோ அல்ல.  மாறாக அங்கு நடை பெற்ற  மனித உரிமை மீறல்கள் பற்றியும் அந்தக் கொலைகள் எந்த நியாயத்தின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்பதுமாகும்.

 

அந்தப் படம் திரையிடுவதற்கு முன்பு மலேசியாவுக்கான  ஸ்ரீ லங்கா தூதர் இப்ராஹிம் அன்சார்  மலேசிய அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அதல் இருந்து  சில வரிகள்:

தீவிரவாதிகளான தமிழ் ஈழ விடுதலப் புலிகளின்  விசுவாசிகள் சிலர் இந்த உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற No Fire Zone என்ற காணொளியை மலேசியாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர் என்று எங்களுக்கு தெரிய வருகிறது.

ஸ்ரீ லங்கா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான இந்தப் படத்தை இந்நாட்டில் திரையிடக் கூடாது என்று எங்களின் தூதரகம் ஏற்கனவே மலேசிய வெளிஉறவு அமைச்சிற்கும, மலேசிய  தணிக்கை குழுவுக்கும் ஒரு கோரிக்கையை  முன் வைத்துள்ளது.”

 

இந்தக் கடிதம் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் அநியாயமாக   கொலை செய்யப்பட்டதை மறைக்க முயற்சிப்பது மட்டுமல்லாமல், கோமாஸ் என்ற அரசு சாரா இயக்கத்தை விடுதலைப் புலிகளின் விசிவாசிகள் என்று சிறுபிள்ளைத் தனமாக விமர்சித்திருப்பது  அவமதிக்கும் செயலாகும்.

 

அந்தக் கடிதம் கண்ட பிறகு அரசு சார இயக்கமான கோமாஸ், ஸ்ரீ லங்கா தூதரை அந்த திரையீட்டிற்கு வருமாரும், வந்து அவரின்  கருதுக்களை கூறுமாறும் அழைப்பு விடுத்தது. அதற்கு இலங்கத் தூதுவரும் வருவதாக தனது சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

 

ஆனால், அன்று அந்தப் படத்தின் திரையீட்டின் போது அவர் வரவில்லை. மாறாக 30-40 உள்துறை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் வந்து தணிக்கைச் செய்யாத அந்தக் காணொளியை திரையிட முடியாது என்று கூறினர்.

 

இந்தத் திரைப்படத்தை வெளியிட்டவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டுமென்று இலங்கை தூதரகம் பின்னணியில் இருந்து  தீவிரமாக செயல் படுவதாக  பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 

அப்படியென்றால் மலேசிய அரசாங்கம் இலங்கை தூதரகம் கொடுக்கும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டதா?

 

அரசாங்கம் நியாயமாகச் செயல் பட வேண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் லேனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக கைவிடுமாறும் நான் வலியுறுத்துகிறேன்.

 

அதோடல்லாமல், ஸ்ரீ லங்காவிற்கான தூதரை அழைத்து மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று கண்டிக்கவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 

TAGS: