இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார்

principalசிலாங்கூர், செமிஞி இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், நாட்டுப்பண்ணைப் பாடவும் மதிக்கவும் மறுத்த மாணவர்களை நோக்கி “இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்குப் போங்க”, என்று திட்டினாராம்.

எஸ்எம்கே எங்கு உசேன் பள்ளியின் உதவிமுதல்வர் செப்டம்பர் 23-இல், மாணவர்களிடம் மலேசியாவைப் பிடிக்காதவர்கள் “திரும்பிச் செல்லலாம்” என்று கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் பள்ளி முதல்வர் காதுக்கு எட்ட, அவர் இப்போது விசாரித்து வருவதாக அந்நாளேடு கூறிற்று. இதனிடையே சீன மாணவர்கள் முகநூலில் அதைப் பதிவு செய்து விட்டனர்.

மாணவர்களில் பலருக்கு பகாசா மலேசியா புரியவில்லை எனப் பள்ளி முதல்வர் அப்துல் கப்பார் குஞ்சி முகம்மட்  (வலம்)  சின் சியு-விடம் தெரிவித்தார்.   அது பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ‘நெகாரா கூ’-வைப் பாட மறுத்தவர்களுக்கும் அதற்கு மதிப்பளிக்கத் தவறியவர்களுக்கும் பிரம்படிகூட கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை என்றாரவர்.

அதனால் பொறுமை  இழந்த உதவி முதல்வர் அப்படிச் சொல்லி இருக்கலாம் என்று கப்பார் கூறினார்.

ஒரு பயிற்சிக்குச் சென்றுள்ள அவர்  நாளை திரும்பி வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்படும் என்றாரவர்.

“என்றாலும், மலாய்க்காரர்களோ, சீனர்களோ இந்தியர்களோ எல்லாரும் மலேசியரே. அவர் இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது.  எனவே, உதவி முதல்வரை மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வேன்”, என்றவர் தெரிவித்ததாக சின் சியு கூறியுள்ளது.

இவ்விவகாரத்தைக் கல்வி அமைச்சும் விசாரித்து வருவதாக துணை அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்ததாகவும் அந்நாளேடு கூறியது.

இந்நாட்டு குடிமக்களை இந்நாட்டு மக்களாக, மலாய் மலேசியர்களாக, சீன மலேசியர்களாக மற்றும் இந்திய மலேசியர்களாக கருதாமல் அவர்களை சீனர்களாகவும், இந்தியர்களாகவும் அடையாளம் கண்டு வருவதுதான் இந்தப் பிரச்னைக்கு அடித்தளமாக இருக்கிறது.

இந்த அடையாளம் காணும் பாடத்தை ஆசிரியர்களுக்கும், அரசாங்கப் பணியாளர்களுக்கும், உபராகரச் சம்பளம் பெறும் மாணவர்களுக்கும், அரசாங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஓதுவது பீரோ டாட்டா நெகாரா (பிடிஎன்) என்ற அரசாங்க அமைப்பாகும்.

இந்த பிடிஎன் ஒரே மலேசியா சுலோகத்தை ஊதிக் கொண்டிருக்கும் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் பிரதமர்துறையின் ஓர் அங்கமாகும்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு பிரதமர்துறையின் இந்தப் பிரிவு இனவாத விஷத்தைக் கக்கி வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசு அதன் ஊழியர்களும், மாநில அரசு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களின் மாணவர்களும் இந்த பிடிஎன் பயிற்சியில் பங்கேற்பதற்கு தடைவிதித்துள்ளது.

இந்த பிடிஎன் அமைப்பு மூடப்பட வேண்டும். இல்லையேல், ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பில் இருக்கும் மாணவர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இங்கே போ, அங்கே போ என்று இடித்துரைப்பார்கள். பின்னர் மன்னிப்பு கோர பினாமி வருவார். பெரிய பிரச்னை இல்லை என்பார்.

இந்தப் பிரச்னை பல வகைகளில் தலைகாட்டுகிறது. வாழை மரம் கட்டக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவதற்கு அடித்தளமே இந்த பிடிஎன்தான்.

பொறுத்திருங்கள். தாலி கட்டக்  கூடாது என்பார்கள். தாலி கட்டியிருக்கும் படம் கொண்டு வந்தால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்பார்கள்.

தாலி கட்ட வேண்டும் என்றால், அங்கே போங்கள் என்று கூறும் நாள் வெகுதூரத்தில் இருக்க முடியாது என்பதை மக்கள் உணர வேணும்.