அசிஸ் பாரி: அல்லாஹ் தீர்ப்பில் நீதிமன்றம் தவறு செய்துள்ளது

 

aziz bariகிறிஸ்துவ வார இதழான த ஹெரால்ட் அதன் மலாய் மொழிப் பதிப்பில் கடவுளைக் குறிக்கும் “அல்லாஹ்” என்ற சொல்லை பயன்படுத்துவதைத் தடை செய்யும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் கூறுகிரார்.

“பெடரல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1) ஐ சமய உரிமைகளுடன் இணைப்பதின் மூலம் அனைவருக்கும் இஸ்லாம் உரைகல்லாக்கப்படுகிறது. அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1) இன் பொதுவான அர்த்தத்திற்கே முரணானதாகும்”, என்று முனைவர் அப்துல் அசிஸ் பாரி இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

“அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1)வின் தெளிவான அர்த்தம் இஸ்லாம் அதிகாரப்பூர்வமான சமயமாக ஆக்கப்பட்டிருந்த போதிலும், முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களுடைய சமயங்களை சுதந்திரமாக, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தொடர்ந்து பின்பற்றலாம் என்பதாகும்”, என்று அவர் கூறினார்.

இந்தத் தீர்ப்பின் விளைவால் முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுவார்கள். அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 3 இன் அடிப்படை சாரத்திற்கு முரணானதாகும் என்றாரவர்.

நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு ஒரு “கொள்கை முடிவு” போல் தெரிகிறது. அம்முடிவு கண்டிப்பான சட்ட அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.