குறைபாடுள்ள சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?

isaஅண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்பு(திருத்த)ச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என என்ஜிஓ-களும் வழக்குரைஞர் மன்றமும் கருதினால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறி இருப்பது நாடாளுமன்ற நடைமுறையைக் கேலி செய்வதாக உள்ளதென மாற்றரசுக் கட்சி எம்பி ஒருவர் சாடியுள்ளார்.

அச்சட்டத்தை மக்களவை, மேலவை இரண்டுமே ஏற்றுகொண்டுள்ளன.

எனவே, ஜாஹிட் அவ்வாறு கூறியிருப்பது,  பிஎன் அதற்குள்ள  பெரும்பான்மையை வைத்து  குறைபாடுடைய ஒரு சட்டத்தை  அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது என்பதைத்தான் காண்பிக்கிறது என டிஏபி எம்பி கோபிந்த் சிங் டியோ கூறினார்.

“ஜாஹிட் அப்போதே சட்டத் திருத்தங்கள் இறுதிசெய்யப்படவில்லை என்பதையும் விவாதித்த பின்னர் மேலும் திருத்தங்கள் செய்யப்படலாம் என்பதையும் மக்களவையிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

“இப்போது ஜாஹிட் என்ன செய்யப் போகிறார்? அது இறுதிசெய்யப்படும்வரை எல்லாவற்றையும் நிறுத்திவைக்கப் போகிறாரா? எதற்காக அதை நிறைவேற்ற அவ்வளவு அவசரம் காட்டினார்? அது அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் அவரது செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ளும் நாடகமா?”, என்று கோபிந்த் வினவினார்.