நஜிப்: சீனி உதவித் தொகை இரத்தானது தாம்பத்திய உறவுக்கு நல்லது

najibசீனிக்கான உதவித் தொகையை அரசாங்கம் இரத்துச் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக சீனி ஒருவரின் புணர்ச்சித்திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்தார்.

இன்று காலை கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார். நேற்று, அவர் தம் பட்ஜெட் உரையில், சீனி அதிகம் உட்கொள்வதால் நீரிழிவு நோய் வரும் அபாயம் பற்றியும் அதன் விளைவாக பார்வைக் குறைவு, சிறுநீரக செயலிழப்பு முதலிவை ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தார்.

“அவற்றுடன் இன்னுமொன்று:  உங்கள் புணர்ச்சித்திறனும் பாதிக்கப்படலாம். காலஞ்சென்ற (கெராக்கன் தலைவர்) லிம் கெங் ஏய்க் இங்கு இருந்திருந்தால் அதை இன்னும் சுவைபடச் சொல்லி இருப்பார்.

gerakan“எப்படிச் சொல்லியிருப்பார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்”, என்று நஜிப் கூற, பேராளர்களிடையே சிரிப்பு அலைமோதியது.

“சீனி நல்லதல்ல. நானும் சீனி இல்லாமல் தேநீர் அருந்த பழகிக்கொண்டேன். உங்கள் நன்மைக்காக நீங்களும் மாறுங்கள். ஒரு பொறுப்பான அரசு  நல்லதைத்தான் நாட்டு மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்”, என்றார்.

பிறகு நஜிப், அரசாங்கம் எதைச் செய்தாலும் அதைக் குறைகூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் மாற்றரசுக் கட்சியினரைச் சாடினார்.

பொருள்கள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி முதலில் குறிப்பிட்டபோது, எதிரணியினர் ஒட்டுமொத்தமாக அதை எதிர்த்தனர், பின்னர் அதைத் தாமதித்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.

“அவர்களின் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்கள். ஏன்? ஏனென்றால், ஆய்வாளர்கள் எல்லாருமே ஜிஎஸ்டியால் மலேசியாவுக்கு நன்மைதான் என்கிறார்கள்”, என நஜிப் கூறினார்.