பிரதமர் துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு

budgetநாட்டின் நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மக்கள் வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக், அவரது அமைச்சின் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதற்குமுன் இல்லாத அளவிற்கு பெருத்துள்ளது.

பிரதமர் துறையின் அடுத்த ஆண்டிற்கான செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரிம16.45 பில்லியன் ஆகும். நடைமுறைச் செலவுக்கு ரிம5.86 பில்லியனும் மேம்பாட்டு செலவுக்கு ரிம10.58 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் இதுதான் மிக அதிகமானதாகும். 2011 ஆம் ஆண்டில் ரிம15.62 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

2014 ஆண்டுக்கான பிரதமர் துறை நிதி ஒதுக்கீடு அதே காலத்திற்கு தற்காப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைவிட கூடுதலாக இருக்கிறது. தற்காப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு ரிம16.1 மில்லியன்.

பிரதமர் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிம16.5 பில்லியனில் மிக அதிகமான நிதியைப் பெறுவது மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா ஆகும். அதற்கு ரிம779 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து, அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவுக்கு ரிம631 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று 2014 ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்த போது நாட்டின் நிதி பற்றாக்குறையை தற்போதைய 4 விழுக்காட்டிலிருந்து அடுத்த ஆண்டில் 3.5 விழுக்காட்டிற்கு குறைக்கும் நோக்கத்தை நாடு கொண்டுள்ளது என்று நஜிப் நாடாளுமன்றத்தில் கூறினார்.