பிகேஆர்: உதவித்தொகை அகற்றப்பட்டதால் சீனி உற்பத்தியாளர்களுக்கு 1பில்லியனுக்கு மேல் ஆதாயம்

anwarஅரசாங்கம் சீனிக்கான உதவித்தொகையை இரத்துச் செய்ததால் முக்கிய சீனி உற்பத்தியாளர்கள், நல்ல அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ள செண்ட்ரல் சுகர் நிறுவனத்தின் சைட் மொக்தார் அல் புஹாரி போன்றோர் ரிம 1பில்லியன் ஆதாயத்தை அள்ளிக் குவிப்பார்கள் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“உதவித்தொகை இரத்தாவதற்குமுன்பு  அந் நிறுவனங்களின் வரிவிதிப்புக்கு முந்திய ஆதாயம் 20-இலிருந்து 25 விழுக்காடாக இருந்தது”, என அன்வார் இன்று மக்களவை விவாதத்தின்போது குறிப்பிட்டார்.

மலேசியாவில் சீனி உற்பத்தியில்  செண்ட்ரல் சுகர்ஸ், (பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸுக்கு சொந்தமான) மலேசியன் சுகர் மெனுபெக்சரிங் ஆகிய இவ்விரண்டு நிறுவனங்களும்தான் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கின்றன.

மலேசியர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு சீனிக்கு வழங்கப்பட்ட 34 சென் உதவித்தொகை இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.