சிறைச்சாலை இருட்டறையில், தனிமையில் உதயகுமாரின் தீபாவளி

uthayaமலேசிய இந்துக்கள் நேற்றிரவு தீபாவளியை கொண்டாடினர். ஆனால், ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அக்டோபர் 31 ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் இடத்திற்கு அருகில் இன்னும் தனி அறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“தூக்குமேடையின் கதவு திறந்துவிடப்படும் சத்தத்தை நான் கேட்டேன். அடுத்து வரப்போகும் தூக்கிற்கு தயாராவதாக இருக்கலாம்.

“இது எனக்கு சிறையில் இரண்டாவது தீபாவளியாகும். 2008 ஆம் ஆண்டில் இசாவின் கீழ் கெம்டா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது முதலாவது சிறைத் தீபாவளி ஆகும்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரை பொது மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

மூர்க்கமான குற்றவாளிகளும் கொலைகாரர்களும் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தாம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் உதயகுமார், முன்னதாக அவ்விடத்தில் ஒரு கைதி கத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

“தீபாவளி நாளில் கூட என்னை மருத்துவமனையின் ஒரு பாதுகாப்பான பகுதிக்கு மாற்றுவதற்கு கொடூர அம்னோ-கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைச்சாலை மறுக்கிறது.

“அனைத்து ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். எனது போராட்டம் தொடரும்”, என்று அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.