பழனிவேல் எந்த உலகத்தில் இருக்கிறார் ?

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013.

kulaநாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின்  தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

“நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற வாசகத்தை கண்டதுமே சிரிப்புதான் வருகிறது. வெள்ளிக்கிழமை  15 ஆம் திகதி அந்த மாநாடு நடைபெறப்போகிறது. பிரதமர் அதற்கு முன்பே அங்கு தமது குழுவினரோடுசென்றுவிடுவார், அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள சாத்தியமில்லை என்று தெரிந்தும் இந்த அறிக்கையை பழனிவேல் விட்டிருப்பது அவர் வேறு உலகிற்கு மாற்றலாகி போய்விட்டாரோ  என்ற கேள்வியை எழ வைக்கிறது. ஒரு வேளை ம.இ.கா தலைவரும் அந்தக்கூட்டத்தில்  கலந்து கொள்ள செல்கிறாரோ? அப்படிபோகும்போது பிரதமரை போகவிடாமல் தடுப்பாரோ என்பது  போன்ற  கோணங்கித்தனமான என்ணங்கள் எல்லாம் எழச் செய்து  விட்டது  பழனிவேலின்   இந்த அறிக்கை !

அவர்  ஒரு விவேகமுள்ள தலைவராக , மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவராக, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக இருந்திருந்தால், இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படும் என்று கேள்விப்பட்ட உடனேயே  நஜீப்பிடன் பேசி அங்கு போகக்கூடாது என்று அவருக்கு ஆலோசனை  கூறியிருக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவரின் இலட்சணம். நாலு பேரில் ஒருவனாக என் கடமைக்கு நானும் குரல் கொடுக்கிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் .

இந்த மாநாட்டில்  கலந்து கொள்ளக்கூடாது என்று எத்தனையோ தரப்பினர்  தினசரி ஊடகங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு வரும்பொழுது,  காலங் கடந்து குரல் கொடுக்கும் ம.இ.காவின் தேசியத் தலைவர் அதைக் கூட சரியாகச் செய்யாமல் இருப்பதை பார்த்தால், பாவம் இந் நாட்டு இந்தியர்கள், நமக்கு வாய்த்த தலைவர் என்ன இவ்வளவு “விவேகம்” உள்ளவர்  என்று உள்ளூரப் பூரித்துப் போவார்கள்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூட தமது நாட்டு  தமிழர்கள் கொடுத்த நெருக்குதல்களுக்கு அடிபணிந்து அந்த மாநாட்டிற்கு போவதில்லை என்ற முடிவை தெரிவித்து விட்டார். இதை பாராட்டும், நான் ஏன் நமது பிரதமர் இந்நாட்டு இந்தியர்களின் உணர்வை மதிக்காமல் போய்த்தான் தீர்வேன் என்று அடம் பிடிக்கின்றார் என்ற கோள்வியை முன்வைக்கிறேன்?

இதுவரையில் பாக்காதான் ராயாட் தலைவர்கள் கூட இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தங்களின் எதிர்ப்பை தெளிவாகவே சொல்லிவிட்டார்கள்.

இந்தியர்களுக்கென்று 5 கட்சிகள் இந்த நாட்டில் உள்ளன. அக்கட்சிகள் அனைத்தும்   பாரிசானுக்கு ஆதரவான கட்சிகள் . இவற்றிலுள்ள இந்திய தலைவர்கள் எவருமே இது வரை ,பிரதமர் இந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க முன்வரவில்லை.

பினாங்கு முதல்வர் லிம் குவன் எங் , பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலிக்கு இருக்கும் திராணியும் பரிவும் கூட இந்த இந்தியர்களின் தலைவர்கள் என்று  சொல்லிக்கொள்ளும் இந்தக் கொசுறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஏன் இல்லாமல் போனது?

இந்தியர்கள் அல்லாத மற்ற இனத்தவர் இலங்கையின் மனித உரிமை மீறல்களை நன்கு புரிந்து வைத்திருக்கும்போது, இந்தியர்களான najib-palanivelஇவர்களுக்கு அந்த சொரணை இல்லமல் போனது ஏன் ? ஆளுங்கட்சிக்கு கூஜா தூக்கியே பழகிப் போன இவர்கள்  எப்பொழுது இந்தியர்களின் உண்மையான எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யப் போகிறார்கள் ?.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியப் பிரதிநிதிகள் யாரும் , குறிப்பாக ம.இ.கா தலைவர் பழனிவேல், இந்த ஈழப் பிரச்சனையை ஒரு பெரிய பொருட்டாகக் கருதாமல், அங்கு நடைபெற்ற கொடுமைகளின் வேதனையை உள்வாங்காமல், பிரதமரிடம் இது குறித்து எடுத்துக் கூறவேண்டிய நேரத்தில் எடுத்துச் சொல்லாமல் இருந்ததால்தான் பிரதமர் இந்த கூட்டத்திற்கு போக முடிவெடுத்துள்ளார் என்று கூறலாம்.

ஆக, மலேசியா, இந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்கின்ற முடிவானது, இந்தியத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்காததால் வந்த விளவு என்பதுதான் உண்மையாக இருக்கமுடியும்.

TAGS: