யூ.பி.எஸ்.ஆர்: சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 16, 2013.

xavierஇவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் அடைவு நிலை மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

மாநிலத்தில் கடந்த ஆண்டின் 321 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு  398 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7A களை பெற்றுள்ளது சிறந்த முன்னேற்றமாகும். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி ஏழு A களை பெற்ற 63 மாணவர்களுடன் மீண்டும் நாட்டில் சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்றதும், மேலும் 4 பள்ளிகளில், காஜாங் தமிழ்ப்பள்ளியில் 28 மாணவர்கள், பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 25 மாணவர்கள் பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் 24 மாணவர்கள், ரவாங் தமிழ்ப்பள்ளியில் 22 மாணவர்கள் ஏழு A களை பெற்றுத் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வாண்டு சிலாங்கூர் தேசியப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தாய்மொழிப்பள்ளிகளின் கல்வித் தரம் மேம்பாடு கண்டுள்ளதையும் தேர்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 62.3 விழுக்காட்டினர் எல்லாப் பாடங்களிலும் தேறியுள்ளனர் என்பதுடன், மலாய் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் தேர்ச்சிகளிலும், தாய்மொழிப்பள்ளிகள் மேம்பாடு கண்டுள்ளன.

இந்த மேம்பாட்டுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசாங்கத்துடனும், என்னுடனும் இணைந்து, தமிழ்ப்பள்ளிகளில் பல்வேறு கல்வி மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ் அறவாரியம், ஈ.டபுல்யூ.ஆர்.எப், சைல்ட், இந்து இளைஞர் இயக்கம் (HYO) போன்ற எல்லாத் தரப்பினர்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி, ஊக்குவிப்பு, உற்சாகமும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டால், தாய்மொழிப்பள்ளிகளும் சிறந்த கல்வியை வழங்க முடியும் என்பதனை நிரூபிக் பக்காத்தான்  அரசு பல திட்டங்களை மேற்கொண்டது.

அவைகளில் பாலர்பள்ளி, கணினிக்கூடம், யூ.பி.எஸ்.ஆர் சிறந்த அடைவு நிலை பாராட்டுகள், பிரத்தியேக யூ.பி.எஸ்.ஆர் வகுப்பு கட்டணம், அறிவியல்கூடம், கைவினை பயிற்சிக்கூடம், மந்தமான மாணவர்களுக்கான சிறப்பு பாட புத்தகங்கள், மாணவர்கள் பொது அறிவை வளர்க்கக்கூடிய இளந்தளிர் இதழ் வெளியீடு, வீடமைப்பு பகுதிகளில் மக்கள் பாலர்பள்ளி என்பன சில முக்கியமானவைகளாகும்.

இப்படிப்பட்ட திட்டங்கள் மேலும் தொடரப்பட வேண்டும், அவற்றை அதிகப்படியான பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கான ஆண்டு ஒதுக்கீட்டை ரீங்கிட் 40 லட்சத்திலிருந்து 60 இலட்சமாக உயர்த்த இந்தப் பட்ஜெட் விவாதத்தின் போது வலியுறுத்துவேன்…

நம்மாணவர்கள் சிறந்த தொடக்கக் கல்வியைப் பெற்றிருந்தால் மட்டுமே இடைநிலைப்பள்ளிகளில் அவர்களின் கல்வி தொடர்ந்து மேம்பாடு காணும் என்பதனை மறக்க கூடாது.

TAGS: