பாஸ்: தீர்த்தம் முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக மாற்றாது

 

Allah - Holy waterமுஸ்லிம்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் காலடி வைத்தாலோ, தீர்த்தம் அவர்களுடைய உடம்பில் பட்டுவிட்டாலோ அவர்கள் எப்படியோ கிறிஸ்துவர்களாகி விடுவார்கள் என்ற அவர்களின் பயம் அறிவுக்கு ஒவ்வாதது என்று  பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா கூறுகிறார்.

“தேவாலயத்திற்கு போனதும் திடீரென்று கிறிஸ்துவர் ஆகிவிடுவது என்ற எதுவும் கிடையாது. அது மடத்தனமாகும்.

“அது கேலிக்குரியது. உண்மையில் அதனை எத்தனை பேர் நம்புகின்றனர்?”, என்று கோலாலம்பூரில் நேற்றிரவு சுமார் 150 பல்லின மக்கள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடலில் அவர் கூறியபோது பெரும் சிரிப்பு ஒலி எழும்பியது.

லெம்பா பந்தாய் பாஸ் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் பேசிய பாஸின் தேசிய ஒற்றுமை பிரிவின் தலைவரான முகஜாஹிட், கிறிஸ்துவர்கள் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்த அச்சம் பற்றியும் கருத்துரைத்தார்.

“முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தினால், முஸ்லிம்கள் சமயக் கொள்கையை கைவிட்டவர்களாவர் என்ற வாதத்தை சில முஸ்லிம்கள் மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்கின்றனர். இது போன்ற பேச்சுகள் எனது சமயத்தை அவமதிக்கிறது.

“உங்களது சமயத்தின் வலிமை எங்கே”, என்று அவர் வினவினார். முஜாஹிட் கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்துவ தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

“சில தரப்பினர்” இந்த விவகாரத்தை தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் இதனால் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துகின்றனர் என்றும் அவர் சாட்டினார்.

“நமது அறிவு முட்டாள்களால் கடத்தப்பட்டுள்ளது. அவர்கள் நமக்கான முடிவுகளை எடுக்கின்றனர். எதற்கும் ஒரு வரம்பு உண்டு. ஆனால், முட்டாள்தனத்திற்கு வரம்பே இல்லை”, என்றாரவர்.

 

 

 

 

 

TAGS: