ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமரை இபான்கள் சாடல்

1 ibanமலேசிய பைபிள் கழகத்தில்  அதிரடிச்  சோதனை  நடத்தி  மலாய்மொழி  பைபிள்கள்  பறிமுதல்  செய்யப்பட்ட  விவகாரம்  தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமர் அப்துல்  ரசாக்கை  சரவாக்கின்  இபான் கிறிஸ்துவ சமூகத்தினர் சாடியுள்ளனர்.

ஜனவரி 2-இல்,  சிலாங்கூர்  இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்)  மேற்கொண்ட அச்சோதனை,  அமைச்சரவையின் 10-அம்ச ஒப்பந்தம்  மீறப்பட்டுள்ளதற்கு  ஒரு  தெளிவான  சான்றாகும் என்று  கெம்புரு  பெசாய்  சரவாக்  என்னும் அமைப்பு கூறியது.

“இபான் கிறிஸ்துவர்களின்  சமய  உரிமைமீது  நடந்துள்ள  ஆக்கிரமிப்பு  குறித்து, 10-அம்ச  ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான  பிரதமர்  பிடிவாதத்துடன் மெளனமாக இருப்பது  இபான்  கிறிஸ்துவ சமூகத்தினருக்குக்  கவலை  அளிக்கிறது”,  என அவ்வமைப்பின்  தலைவர், பாதிரியார்  கிரிமான் ஊஜாங்  கூறினார்.

மத்திய  அமைச்சரவை,  கைப்பற்றப்பட்ட  பைபிள்களைத்  திருப்பிக் கொடுக்குமாறு பணிக்க  வேண்டும்  என்பதுடன் இபான்  மொழி  பைபிள்கள்  மற்றும்  கிறிஸ்துவ சமய  நூல்களின் விசயத்தில்  அரசுத்துறைகளின்  தலையீடு  இனி இருக்காது  என்ற  உத்தரவாதமும் அளிக்கப்பட  வேண்டும் என  கிரிமான்   வலியுறுத்தினார்.