பினாங்கு அங்காடி வியாபாரிகள் தவறான இடத்தில் கோபத்தைக் காட்டுகிறார்கள்

hawkersபினாங்கில்  அங்காடி  வியாபாரிகள், உணவைக்  கையாளும் சரியான  முறைகளைக்  கற்பிக்கும் பயிற்சி  வகுப்புகளில்  கலந்துகொண்டு ஜனவரி   23-க்குள் ஒரு சான்றிதழைப்  பெறாதுபோனால்  அபராதம்  விதிக்கப்படலாம்  அல்லது சிறையிடப்படலாம்  என்ற  அச்சத்தால்  உந்தப்பட்டவர்களாய் பறிற்சி  வகுப்புகளில்  தங்களைப் பதிந்துகொள்ள முந்துகிறார்கள்.

அது  சுகாதார  அமைச்சின் கட்டளை  என்பதை  அறியாது  பலர்  பினாங்கு  அரசுதான்  அதற்குக்  காரணம்  என்று  அதைக்  குறைகூறியுள்ளனர்.

பினாங்கு  முனிசிபல் மன்றம் (எம்பிபிபி), மாநில அரசு, டிஏபி ஆகியவைமீது  அங்காடி  வியாபாரிகள் ஆத்திரத்தைக்  காட்டுகிறார்கள்  என கவுன்சிலர்  ஒங்  ஆ தியோங்  கூறினார்.

“அதை  நாங்கள்  ஆதரிக்கவில்லை.  சாதாரணமாக  உணவு கையாளும் பயிற்சிக்காக  ரிம50  கட்டணம்  வாங்குகிறார்கள். முனிசிபல்  மன்றம் அதை  இலவசமாக  வழங்குகிறது”, என்றாரவர். 

பயிற்சியை  அமைச்சே  நடத்தாமல்  அயல் நிறுவனத்திடம்   ஒப்படைத்திருப்பது  ஏன்  என்றும்  அவர்  வினவினார்.

இதனால்  பணம்  அமைச்சுக்கோ  அரசாங்கத்துக்கோ  அல்லாமல்  தனியார்  நிறுவனங்களுக்குச் செல்கிறது. 

“அந்நிறுவனங்களுக்குப்  பின்னணியில்  இருப்பவர்கள்  யார்? முறையான  பயிற்சி  வழங்கும்  திறமை  அமைச்சிடம்  இருக்கும்போது  அவர்களிடம்  அப்பொறுப்பை  ஒப்படைத்ததன்  நோக்கம்  என்ன?”,  எனவும்  ஒங்  வினவினார்.

நாடு  முழுவதும்  அப்பயிற்சிகள்  நடப்பதால்  அந்நிறுவனங்கள்  ரிம72.5 மில்லியன்  ஆதாயம்  பெறும்  வாய்ப்பு  உள்ளது  என்றாரவர்.