புத்தாண்டு பேரணி டி-சட்டைகளை தயாரித்தவர் கைது

 

New year rally1துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு பேரணியில் பங்கேற்ற ஆர்பாட்டக்காரர்கள் அணிந்திருந்த டி- சட்டைகளைத் தயாரித்து விற்றவர் இன்று வாக்குமூலம் அளிக்க செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார்.

முகமட் ஸுல் ரைடி அஹமட் தார்மிஸி பீனல் சட்டம் செக்சன் 124(D) இன் கீழ் கைது செய்யப்பட்டதாக அவரின் நண்பர் வோங் கார் ஃபை கூறினார்.

இந்த செக்சன் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதகமான ஆவணங்கள் மற்றும் நூல்கள் New year rally2வெளியிடுவது பற்றியதாகும். இதன் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அதிகப்பட்சமான 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

முகமட் ஸுல் ரைடி போலீஸ் தலைமையகத்திற்கு இன்று இரவு மணி 7.30 அளவில் வந்து சேர்ந்தார். அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

“போலீஸ் அவரை உடனடியாகக் கைது செய்தது”, என்று வோங் கூறினார்.

இதற்கு முன்னதாக, போலீசார் ஸுல் ரைடிக்கு எதிராக மேற்கொண்ட அற்பத்தனமான நடவடிக்கைகளை மனித உரிமை கழகமான சுவாராம் கண்டித்துள்ளது.

சுவாராமின் கூற்றுப்படி, டிசம்பர் 30, 2013 இல் போலீசார் ரைடியை கைது செய்வதற்காக பேராக், தைப்பிங்கிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அன்று அவர் வீட்டிலில்லை.

ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள ரைடியின் வாடகை வீட்டை போலீசார் அதிரடிச் சோதணை செய்து அவர் தயாரித்திருந்த டி- சட்டைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.