பேரணி எதிர்ப்பு நிலையை அறிவித்த “துணிச்சலான மூவரை” ஆயர் பாராட்டுகிறார்

“கிறிஸ்துவ எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விட வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக விவேகமான முடிவை எடுத்துள்ள” பாஸ், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஆகியோரை கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் பாராட்டியுள்ளார்.

ஆசிய ஆயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாங்காக் சென்றுள்ள அவருடன் தொடர்பு கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

“நான் மலேசிய நிகழ்வுகளை இணையம் வழி தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஷா அலாமில் எதிர்வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் சம்பந்தப்படுவதை நிராகரித்த பாஸ் கட்சிக்கு நான்  வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்”, என மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் மலேசிய கத்தோலிக்க ஆயர் மாநாட்டின் நடப்புத் தலைவருமான ஆயர் பால் சொன்னார்.

“அத்துடன் மலேசியாவில் முஸ்லிம்களுக்கு கிறிஸ்துவமய மருட்டல் ஏதுமில்லை எனத் துணிச்சலாக அறிவித்த அன்வார் இப்ராஹிமையும் நான் பாராட்டுகிறேன். அந்தப் பேரணி முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் அதனால் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்த டாக்டர் சுவா சொய் லெக்கின் துணிச்சலுக்கும் என் வணக்கம்.”

ஒரு போராட்டத்துக்காக குடி மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கக் கூடாது என்னும் கருத்தை தாம் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஆயர் பால், ஆனால் “அந்த பேரணி கிறிஸ்துவ எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விடுவதை நோக்கிச் செல்வதாகத் தோன்றுகிறது” என்றார்.

“நாட்டின் சில முக்கிய ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் செய்யப்படும் பிரச்சாரத்தை பார்க்கும் போது மலேசியாவில் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவர்களாக மாற்றப்படுவதாக நீங்கள் எண்ணக் கூடும்”, என்றார் அவர்.

“ஹாருஸ்ஸானி ஸாக்காரியா போன்றவர்களுடைய கற்பனையில்தான் அத்தகைய எண்ணம் உண்மை.  நாட்டில் எங்கும் இல்லை”, என அந்த ஆயர் கருதுகிறார்.

பொறுப்பற்ற அரசாங்கத்தை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்

மலேசியாவில் முஸ்லிம்கள் கிறிஸ்துவமயமாக்கப்படுவது குறித்த அபாய ஒலியை பேராக் முப்தியுமான ஹாருஸ்ஸானி ஸாக்காரியா அவ்வப்போது எழுப்பி வருகிறார்.

“சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம் கிறிஸ்துவ உறவுகளின் வரலாற்றில் அந்த மனிதருடைய கட்டுக்கதைகளை அனுமதிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையிலும் சாதாரணமாகவும் ஒர் அரசாங்கம் நடந்து கொள்வதை நான் இது வரை பார்த்ததில்லை,” என ஆயர் பால் வருத்தத்துடன் கூறினார்.

சனிக்கிழமை பேரணியில் உரையாற்றவிருக்கின்றவர்களில் ஹாருஸ்ஸானியும் ஒருவர் ஆவார்.

தீயதை எதிர்க்கும் கடப்பாட்டை கிறிஸ்துவத் தலைவர்கள் கொண்டுள்ளதாக ஆயர் பால் குறிப்பிட்டார்.

இரட்டை வேடம் போடுகின்ற, கலவரத்தைத் தூண்டுகின்றவர்களை எதிர்நோக்கும் போது கோழையாகி விடுகின்ற எந்த ஓர் அரசாங்கமும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட வேண்டிய அரசாங்கம்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

TAGS: