பேரணியில் சேர்ந்துகொள்க-முஸ்லிம் தலைவர்களுக்கு அறைகூவல்

அரசுசார்பற்ற அமைப்புகளின் கூட்டணியான ஹிம்புன், சனிக்கிழமை நடைபெறும் மதமாற்று-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளையும் தனிப்பட்டவர்களையும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பன்மைத்துவம் மிக்க மலேசிய சமுதாயத்தில் தங்கள் சமயத்தைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக எல்லாக் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களும் அப்பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் முகம்மட் அஸ்மி அப்துல் ஹமிட் கூறினார்.

“அல்லாஹ் கொடுத்துள்ள சமயத்தைக் காக்கவும் சமூகத்தின் கெளரவத்தை நிலைநிறுத்தவும் சனிக்கிழமை பேரணியில் கலந்துகொள்ளுமாறு எல்லாக் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்”, என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முகமட் அஸ்மி(கருப்பு சொங்கோக்குடன் இருப்பவர்) குறிப்பிட்டிருந்தார்.

பல தலைவர்கள் குறிப்பாக பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அதில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்திருப்பதுடன் கட்சி உறுப்பினர்களையும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஹிம்புன், பெர்காசா போன்ற அமைப்புகளுடனோ, பிகேஆரிலிருந்து அம்னோவுக்குக் கட்சிமாறிய எசாம் முகம்மட் நோர் போன்ற தனிப்பட்டவர்களுடனோ தனக்குத் தொடர்பில்லை என்று கூறிக்கொண்டாலும் அது அம்னோ ஆதரவுபெற்ற ஒரு நிகழ்வு என்ற ஐயப்பாட்டை அகற்ற முடியவில்லை. அதுவும், அமைச்சர் ஒருவர் நேற்று அதற்கு ஆசி கூறியதுடன் அதில் பாஸ் கட்சியும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்தச் சந்தேகம் மோலோங்கியுள்ளது.

‘அரசியல் தொடர்பு இல்லை’

முகமட் அஸ்மியைப் பொருத்தவரை, பாஸின் முடிவை  மதிப்பதாககக் கூறியுள்ளார். பேரணி, அரசுசாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அது அரசியல்-கலப்பற்ற நிகழ்வாகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவோர் அரசியல் கட்சியின் தொடர்பும் இதில் இல்லை”, என்றாரவர்.

சில அரசாங்க அமைப்புகளும் அரசுசார்ந்த அமைப்புகளும் உதவி வழங்குகின்றன அதுவும் ஹிம்புன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவை உதவுகின்றன என்றாரவர். 

இந்த ஹிம்புன் பேரணி, ஆகஸ்ட் 3-இல், டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு விருந்தில், அதிரடிச் சோதனை நடத்திய சிலாங்கூர் இஸ்லாமிய சமயவிவகாரத்துறை(ஜயிஸ்) அங்கு முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்றுள்ளது என்று கூறியதை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த அதிரடிச் சோதனை தொடர்பில் அறிக்கை வெளியிட்ட சிலாங்கூர் சுல்தான் முஸ்லிம்களை மதம் மாற்ற முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும் எந்த ஒரு தரப்புக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றார்.

TAGS: