ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி என அழைக்கப்படும் மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு கொள்கின்றவர்களுடைய உணர்வுகளை ஏற்பாட்டாளர்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார்.
“நமது சமயத்தையும் இஸ்லாத்தின் புனிதத் தன்மையையும் தற்காக்கும் போராடும் போது அதனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். பெரிய கலவரம் மூளும் என நான் எண்ணவில்லை”, என அவர் சொன்னார்.
சமயங்களுக்கு இடையில் பூசலை அந்தப் பேரணி தூண்டி விடும் என பாஸ் கட்சி எச்சரித்துள்ளது பற்றி வினவப்பட்ட போது இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
அந்தப் பேரணியிலிருந்து விலகியிருப்பதின் மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஸ் முயலுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“மற்ற போட்டிக் கட்சிகள் அந்தப் பேரணிக்கு அங்கீகாரம் அளித்தால் அவர்கள் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கட்சி அதனை நடத்தி, அதில் அவர்கள் தலைவர் பேசினால் அப்போது அது சரியாகி விடும்”, என பாசிர் மாஸ் சுயேச்சை எம்பி கூறினார்.
“ஆனால் இஸ்லாம் என்பது பாஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமான சொத்து அல்ல. அந்த சமயத்தைப் பின்பற்றுகின்ற அனைவருக்கும் அது சொந்தமானது.”
அந்தப் பேரணியின் ஏற்பாட்டில் இப்ராஹிம் சம்பந்தப்படவில்லை என பேரணி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். என்றாலும் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதாக இப்ராஹிம் சொன்னார்.
அந்த சனிக்கிழமை நிகழ்வில் பேசுவதற்கு தாம் அழைக்கப்படவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து ஆதரிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
துணை அமைச்சர் கவலை தெரிவித்தார்
அந்த உத்தேசப் பேரனி குறித்து பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கவலை தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த அம்னோ உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துமாறு அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாகைக் கேட்டுக் கொண்டார்.
“இந்த குறிப்பிட்ட விஷயத்தில் அம்னோ ஆதரவாளர்களை சாந்தப்படுத்துமாறு நான் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். இது மற்றவர்களுக்கு எதிராக சமய உணர்வுகளைத் தூண்டி விடக் கூடிய சாத்தியத்தைக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்,” என லியூ மலேசியாகினியிடம் சொன்னார்.
“சமயப் பிரச்னைகள் என்று வரும் போது நாம் சுல்தான்களிடமும் அகோங்கிடமும் அவற்றை விட்டு விடலாம் ஏனெனில் அரசியலமைப்பின் கீழ் அத்தகைய விவகாரங்களுக்கான பாதுகாவலர்கள் அவர்கள் ஆவர்.”