கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள மேம்பாட்டுத் திட்டங்களினால் சரவாக் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டு வருவதாக எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூறிக் கொண்டனர்.
அவ்வாறு வாக்குறுதி கொடுக்கப்பட்ட திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவே இல்லை என்பதே அதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சரவாக்கிற்காக மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் பெறும் 310 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறிய திட்டங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
நாட்டில் மிகவும் ஏழ்மையில் உள்ள அந்த மாநிலத்துக்காக பல ஒதுக்கீடுகள் “திரும்பத் திரும்ப” அறிவிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
“பிரதமரும் துணைப் பிரதமரும் ஆண்டுதோறும் ஒரே அறிவிப்புக்களை திரும்பத் திரும்பச் செய்து வருகின்றனர். ”
“ஆகவே அடுத்த ஆண்டும் தேசிய வரவு செலவுத் திட்டம் பிஎன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதன் தலைவர்கள் அதே அறிவிப்புக்களை மீண்டும் வெளியிடுவார்கள். அவர்களுடைய ஆதரவாளர்களும் மீண்டும் மீண்டும் கூறப்படும் அந்த அறிவிப்புக்களுக்கு கை தட்டுவார்கள்,” என்றார் அன்வார்.
“ஆம் சரவாக் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்,” என பிகேஆர் மூத்த தலைவரும் பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அவர் தெரிவித்தார். அவர் இன்று கூச்சிங்கிற்குப் புறப்படுகிறார்.
இன்னும் தொடங்கப்படாத திட்டங்களில் மொத்தம் அரை பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்டுள்ள திட்டங்கள் டெண்டர் முறையில் வழங்கப்படாமல் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளன.
‘திட்டங்களில் 85 விழுக்காட்டின் நடப்பு நிலை தெரியவில்லை’
அடுத்து அன்வார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த ஆண்டு ஆற்றிய வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டினார். ” பெரிய திட்டங்கள் திறந்த, வெளிப்படையான முறையில் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.”
ஆனால் சரவாக் விஷயத்தில் அப்படி இல்லை என்றார் அன்வார்.
அந்த மாநிலத்துக்கான 310 திட்டங்களில் நான்கு விழுக்காடு மட்டுமே டெண்டர் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் 11 விழுக்காடு திட்டங்கள் நேரடிப் பேச்சு வார்த்தைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் சொன்னார்.
“எஞ்சியுள்ள 85 விழுக்காடு திட்டங்களின் நடப்பு நிலை குறித்து எதுவும் தெரியவில்லை.”