கல்வியாளர்களுக்கு சோகமான நாள்

“காரணம் கோரும் கடிதமே தேவையற்றது, அந்தப் பேராசிரியரை இடைநீக்கம் செய்தது விவேகமில்லாதது. அஜிஸ் பேரி உண்மையைத் தானே சொன்னார். ஆனால் அந்த உண்மைகள் அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்கவில்லை.”

பல்கலைக்கழகம், அஜிஸ் பேரி-யை இடைநீக்கம் செய்தது

பார்வையாளன்: அம்னோவின் மோசடியான வழிகளை அம்பலப்படுத்தும் யாரையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு அம்னோ பயன்படுத்தும் வியூகம் இதுவாகும்.

கடந்த காலத்தில் அம்னோவைக் குறை கூறிய சந்திரா முஸாபாரை முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலாயாப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கினார். அவர் இப்போது மாறி விட்டார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரட்டை வேடத்துக்கும் கேலிக்கூத்தான ஒரே மலேசியாவுக்கும் துதி பாடிக் கொண்டிருக்கிறார்.

அப்துல் அஜிஸ் பேரி, அம்னோவுக்கு பிடிக்காத ஒருவராக இருந்தார். காரணம் அவர் அம்னோ கங்காரு நீதிமன்றங்கள் வழங்கும் அபத்தமான தீர்ப்புக்கள் பற்றி குறிப்பாக பேராக் அரசியலமைப்பு நெருக்கடி பற்றி நியாயமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தேவையற்ற, நியாயமற்ற, வெறுக்கத்தக்க அந்த நடவடிக்கையை எடுக்குமாறு நஜிப்பும் அம்னோவும் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

ஜெஸ்ஸி: கல்வியாளர் ஒருவர் தமது நிபுணத்துவ துறைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துச் சொல்வது அவரது கடமைகளில் ஒன்றாகும். அந்த சாதாரண உண்மையை அந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் புரிந்து கொள்ளாதது பெருத்த அவமானமாகும்.

நாட்டின் உயர் கல்விக்கூட நிர்வாகிகள் பெரும்பாலும் ஆற்றல், தகுதி அடிப்படையில் அல்லாமல் வேறு காரணங்களுக்காக நியமிக்கப்படுகின்றனர். அப்படி இருக்கும் போது நாம் எதனை எதிர்பார்க்க முடியும்? உண்மையான கல்வி சார்ந்த சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதையே உணராதவர்கள் அவர்கள்.

நமது பல்கலைக்கழகங்களில் சிந்தனையாளர்கள் இல்லாதது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. நாம் அந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சட்டப் பேராசிரியர் என்ற முறையில் சட்ட அம்சங்கள் மீது கருத்துச் சொல்ல அவர் அனுமதிக்கப்பட வேண்டும்.

பென் ஹாசி: உண்மையில் கல்வியாளர்களுக்கு இது சோகமான நாள். தாங்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கூட கருத்துக் கூற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆகவே நமது பல்கலைக்கழகங்கள் எங்கே போய்க்  கொண்டிருக்கின்றன. உலகின் தலையாய 100 பல்கலைக்கழகங்களுக்குள் இல்லை என்றாலும் ஆயிரத்துக்குள்ளாவது  இடம் பெறுமா?

எல்லாக் கல்வியாளர்களும் சமூகத்தில் என்ன நடந்தாலும் மௌனமாக இருந்து  பிஎன் -னை ஆதரிக்க வேண்டும். அரசாங்கத்திற்கும் அரசர் அமைப்புக்கும் புகழ் பாடினால் போதும். பாதுகாப்பாக இருக்கலாம்.

கேஎஸ்என்: காரணம் கோரும் கடிதமே தேவையற்றது. அந்தப் பேராசிரியரை இடைநீக்கம் செய்தது விவேகமில்லாதது. அஜிஸ் பேரி உண்மையைத் தானே சொன்னார். ஆனால் அந்த உண்மைகள் அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பேராசிரியர் அவர்களே தொடர்ந்து போராடுங்கள். பொது மக்கள் உங்கள் பக்கம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைப்படும் போது உங்களுக்கு உதவுவர்.

பேஸ்: அறிவாளிகளுக்கு இது சோகமான நாள்- தங்களது கருத்துக்களை வெளியிட்டதற்காக.  உங்கள் போராட்டம் தொடரட்டும். ஒர் எம்பி-யாக வேண்டிய தேவை இல்லாமல் பேராசிரியர் என்ற முறையில் உண்மைக்கு போராட உங்களுக்கு அல்லாஹ் வலிமையைக் கொடுக்கட்டும்.