நஜிப், மனித உரிமை பிடிக்கவில்லையா? ஐநாவை விட்டு வெளியேறுவீர்

 

Najib - Quit UNமனித நலக் கோட்பாடு மற்றும் சமயச் சார்பின்மை இஸ்லாத்திற்கு மருட்டலாக இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார். இக்கோட்பாடுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் மலேசியாவை ஐக்கிய நாட்டு அமைப்பிலிருந்து மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் தொடர்புடைய ஒரு சிந்தனைக் குழாம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பிரதமர் மேற்கொள்ள வேண்டிய அடுத்த பொருத்தமான நடவடிக்கை மலேசியா ஐநாவிலிருந்து விலகிக்கொள்ளும் கடிதத்தை அளிப்பதுதான், ஏனென்றால் அந்த அமைப்புதான் உலகளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முன்னணி அமைப்பாகும்”, என்று இன்ஸ்டிடியுட் ராக்யாட்டின் ஆய்வுத்துறையின் இயக்குனர் இன் சாவ் லூங் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை குவாந்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நஜிப் மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அவர் “மனித உரிமைத்துவம்” (“human rights-ism”) என்பதை ஒரு புதிய “சமயம்” என்று பெயர் சூட்டும் அளவிற்கு சென்றுள்ளார்.

“உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஐநாவால் ஊக்குவிக்கப்படுகிறது. அது பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம், மனித இனத்திற்கிடையில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், உயிர், தடையற்ற நிலை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமை, சட்டத்தின் முன் சமத்துவம், குற்றவாளி என தீர்மனிக்கப்படும் வரையில் மாசற்றவர் என்ற அனுமான உரிமை, சுதந்திரமாக அமைதியாகக் கூடுவதற்கும் அமைப்புக்களை உருவாக்குவதற்குமான உரிமை, கல்விக்கான உரிமை மற்றும் இதர “அச்சுறுத்தும்” கோட்பாடுகள் ஆகியவற்றை வளப்படுத்தும் அமைப்பு என்று அவர் சற்று ஏளனமாகக் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் மலேசியா ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டங்களில் பங்கேற்று வருவதை அவர் “அவமதிப்பான” செயல் என்று கூறினார்.

1948 ஆம் ஆண்டில் இந்த உலகளாவிய பிரகடனம் கையெழுத்திடப்பட்ட பின்னர் அது நமக்கு ஒரு “புதிய” மருட்டலாகியிருப்பதைக் கையாளும் முதல் பிரதமர் ஆகும் வரலாற்றுப்பூர்வமான சந்தர்ப்பத்தை நஜிப் பெறுகிறார் என்று இன் மேலும் கூறினார்.